பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்த நிலையில் நிதிஷ் குமாரின் பதவியேற்பு விழா திடீர் ஒத்திவைப்பு?.. துணை முதல்வர், அமைச்சர்கள் அதிகார பகிர்வில் கூட்டணிக்குள் சலசலப்பு
பாட்னா: பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்த நிலையில் நிதிஷ் குமாரின் முதல்வர் பதவியேற்பு விழா திடீர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளின் துணை முதல்வர், அமைச்சர்கள் அதிகார பகிர்வில் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதால், பதவியேற்பு விழாவுக்கான நாள் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மொத்தமுள்ள 243 தொகுதிகளில், நான்கில் மூன்று பங்கு இடங்களைக் கைப்பற்றி, 202 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில், பாஜக 89 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களில் வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அதேசமயம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ‘ஜன் சுராஜ்’ கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் கணக்கைத் தொடங்கத் தவறியது. இந்தத் தேர்தலில் பாஜக - 89, ஐக்கிய ஜனதா தளம் - 85, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) - 25, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) - 19, காங்கிரஸ் - 6, ஏஐஎம்ஐஎம் - 5, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்றது) - 5, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா - 4, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் - விடுதலை) - 2, இந்தியன் இன்குலூசிவ் கட்சி - 1, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - 1, பகுஜன் சமாஜ் கட்சி - 1 ஆகிய இடங்களை பெற்றுள்ளன.
கூட்டணி வாரியாக பார்க்கும் போது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்றது), ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா) 202 இடங்களும், இந்தியா கூட்டணிக்கு ( ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் - விடுதலை) - 2, இந்தியன் இன்குலூசிவ் கட்சி - 1, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - 1) கூட்டணிக்கு 35 இடங்களும் கிடைத்துள்ளன. இந்தத் தேர்தலில், பெண்களின் நலனுக்காக நிதிஷ் குமார் அரசு கொண்டு வந்த ‘முதலமைச்சர் மகிளா ரோஜ்கார் யோஜனா’ திட்டத்தின் கீழ் 1.20 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்ட தலா 10,000 ரூபாய் மற்றும் இளைஞர்களின் பேராதரவு ஆகியவை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
இந்த மாபெரும் வெற்றியையடுத்து, நிதிஷ் குமார் மீண்டும் 10வது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். இந்த வெற்றியின் மூலம், தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து ஐந்தாவது முறையாக பீகாரில் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. நிதிஷ் குமாரின் பதவியேற்பு விழா, முதலில் வரும் 22ம் தேதி நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ‘200-க்கும் அதிகமான இடங்கள்’ என்ற இமாலய வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், ஒரு நல்ல நாளில் பதவியேற்பு விழாவை நடத்த கூட்டணித் தலைவர்கள் விரும்புவதால், விழா முன்கூட்டியே நடத்தப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்த பிறகு வரும் 16 அல்லது 18 ஆகிய தேதிகளில் விழா நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடியும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வெற்றியின் மூலம், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பீகாரின் முதலமைச்சர் பதவியை வகித்து, அம்மாநிலத்தின் நீண்டகால முதல்வர் என்ற தனது சாதனையை நிதிஷ் குமார் மேலும் வலுப்படுத்தியுள்ளார். அவரது வியூகமான கூட்டணிகளும், நிர்வாகத்தின் மீதான கவனமுமே இந்த வெற்றிக்குக் காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், ஐக்கிய ஜனதா தளத்தில் நிதிஷ் குமாருக்குப் பிறகு அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியும், கூட்டணியில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவுடனான அதிகாரப் பகிர்வு (துணை முதல்வர், அமைச்சர்களின் முக்கிய இலாகா) குறித்த விவாதங்களும் பீகார் அரசியலில் எழுந்துள்ளன.
அதேபோல் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒன்றிய அமைச்சர் சிராஸ் பஸ்வானின் கட்சி 19 இடங்களை கைப்பற்றியுள்ளதால், கூடுதல் அமைச்சர் பதவி கேட்டு பேசி வருகிறது. பீகார் கூட்டணி விவகாரத்தை பொறுத்தமட்டில் பாஜக தேசிய தலைமையே முடிவு செய்வதால், அடுத்த ஓரிரு நாட்களில் கூட்டணி கட்சிகளுக்கான துணை முதல்வர்கள், அமைச்சர்கள் குறித்த விபரங்கள் பேசி இறுதி செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
29 அமைச்சர்களில் 28 பேர் வெற்றி
வாக்குப்பதிவுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி, பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் களமிறங்கிய 29 அமைச்சர்களில் 28 பேர் தங்களது தொகுதிகளில் வெற்றி வாகை சூடியுள்ளனர். துணை முதலமைச்சரும், வேளாண் துறை அமைச்சருமான விஜய் குமார் சின்ஹா, லக்கிசராய் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை சுமார் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மற்றொரு துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான சாம்ராட் சவுத்ரி, தாராபூர் தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளரை 45,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இருப்பினும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சுமித் குமார் சிங், சகாய் தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் சாவித்திரி தேவியிடம் 12,972 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இது ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட ஒரே அமைச்சர் தோல்வியாகும்.


