தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக தேர்வு பீகார் முதல்வராக 10வது முறை இன்று பதவி ஏற்கிறார் நிதிஷ்குமார்: பாட்னா காந்தி மைதானத்தில் பிரமாண்ட விழா
பாட்னா: பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் இன்று 10வது முறையாக பதவி ஏற்க உள்ளார். பாட்னா காந்தி மைதானத்தில் நடக்கும் பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். பீகார் சட்டப்பேரவைக்கு நவ.6 மற்றும் 11ஆம் தேதிகளில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. இதையடுத்து நேற்று பீகார் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.
பாட்னாவில் நடைபெற்ற புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் நிதிஷ் குமார் அந்தகட்சியின் சட்டப்பேரவை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஜேடியு சட்டமன்றக் கட்சித் தலைவராக நிதிஷ் குமாரை நியமிக்கும் முன்மொழிவை கட்சித் தலைவர்கள் விஜய் சவுத்ரி மற்றும் உமேஷ் குஷ்வாஹா ஆகியோர் முன்மொழிந்தனர். மேலும் மூத்த ஜேடியு தலைவர் பிஜேந்திர யாதவ் அதை ஆதரித்தார். பின்னர், ஜேடியு தேசிய செயல் தலைவர் சஞ்சய் ஜா மற்றும் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் ‘லாலன்’ ஆகியோரும் இந்த முன்மொழிவை ஆதரித்தார்.
ஜேடியு சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நிதிஷ் குமார் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சித் தலைவர்களிடமும் உரையாற்றி, பீகார் நலனுக்காக அயராது பாடுபடுமாறு கேட்டுக் கொண்டார்.
இதே போல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தாராபூர் எம்எல்ஏவும் துணை முதல்வருமான சாம்ராட் சவுத்ரி பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக விஜய்குமார் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், முன்னாள் ஒன்றிய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் ஐக்கிய ஜனதா தளம்(85), பா.ஜ (89), சிராக் பாஸ்வான் கட்சியான எல்ஜேபி (ஆர்வி) (19), எச்ஏஎம் (5), ஆர்எல்எம் (4) கட்சி எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்வர் பதவிக்கு நிதிஷ்குமார் பெயரை ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் விஜய் சவுத்ரி முன்மொழிந்தார். துணை முதல்வர்களும், பா.ஜ எம்எல்ஏக்களுமான சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோர் ஆதரித்தனர். கூட்டணி கட்சிகளான எல்ஜேபி(ஆர்வி), எச்ஏஎம், ஆர்எல்எம் எம்எல்ஏக்களும் இந்த முன்மொழிவை ஆதரித்தனர்.
இந்த கூட்டம் முடிவுக்கு வந்ததும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் தலைவர்கள் கவர்னர் மாளிகைக்கு சென்றனர். நிதிஷ்குமாருடன் ஒன்றிய அமைச்சர்கள் சிராக் பாஸ்வான், ராஜீவ் ரஞ்சன் சிங் லாலன், தர்மேந்திர பிரதான், ஆர்.எல்.எம் தலைவர் உபேந்திர குஷ்வாஹா, உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோரும் சென்றனர். அங்கு ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்து முதல்வர் நிதிஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். மேலும் சட்டப்பேரவையை கலைக்கும்படியும் கேட்டுக்கொண்டார். அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையும் ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
இதை தொடர்ந்து இன்று பீகார் மாநிலத்தில் 10வது முறையாக நிதிஷ்குமார் முதல்வர் பதவி ஏற்க உள்ளார். பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் அவருடன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர். பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், தர்மேந்திர பிரதான், சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உட்பட பல உயர்மட்ட தலைவர்கள் இந்த பிரமாண்டமான நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.
அதிக நாட்கள் முதல்வர் சாதனை படைத்த நிதிஷ்
பீகார் மாநிலத்தில் முதல்வர் பதவியில் அதிக நாட்கள் இருந்த சாதனையை நிதிஷ்குமார் படைத்துள்ளார். அவர் 19 ஆண்டு 76 நாட்கள் பதவியில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீகிருஷ்ணா சின்ஹா 17 ஆண்டு 51 நாட்கள் பதவியில் இருந்துள்ளார். தொடர்ச்சியாக 14 ஆண்டு 314 நாட்கள் பதவியில் இருந்துள்ளார். நிதிஷ் தொடர்ச்சியாக 10 ஆண்டு 270 நாட்கள் பதவியில் உள்ளார். இன்று 10வது முறையாக முதல்வர் பதவியை நிதிஷ் ஏற்க உள்ளார். இந்த 5 ஆண்டுகளும் தொடர்ச்சியாக முதல்வர் பதவியில் இருந்தால் கிருஷ்ணா சின்ஹா சாதனையையும் நிதிஷ் தகர்ப்பார். நிதிஷ் முதல்வர் பதவியில் இருந்த நாட்கள் வி வரம்:
1. 2000 மார்ச் 3 முதல் மார்ச் 10 வரை - 7 நாட்கள்.
2. 2005 நவம்பர் 24 முதல் 2014 மே 20 வரை - 8 ஆண்டு 177 நாட்கள்.
3. 2015 பிப்.22 முதல் தற்போது வரை - 10 ஆண்டு 270 நாட்கள்
அமைச்சர் பதவி
யாருக்கு? எத்தனை?
முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் பதவி ஏற்க உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் புதிய அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்விவரம்:
பா.ஜ-16
ஐக்கிய ஜனதாதளம்-14
சிராக் பாஸ்வான் கட்சி-3
ஜிதன்ராம் மஞ்சி கட்சி-1
ஆர்எல்எம் கட்சி-1
* தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற எனது முடிவு தவறானது: பிரசாந்த் கிஷோர் கருத்து
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற எனது முடிவை ஒரு தவறாக கருதலாம். எனது கட்சிக்கு 4 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் கிடைக்கும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,’ திருப்திகரமான முடிவை அடைய நாம் நிறைய செய்ய வேண்டும். எதிர்காலத் தேர்தல்களில் வெற்றி பெற எனது முயற்சி தொடரும். பீகாரில் வெற்றி பெறாமல் நான் பின்வாங்க மாட்டேன். அதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று எனக்குத் தெரியவில்லை’ என்றார்.


