Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

சட்டப்பேரவையை கலைக்க அமைச்சரவை தீர்மானம்; பீகார் ஆளுநரை சந்தித்தார் நிதிஷ்குமார்: நாளை முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார்

பாட்னா: பீகார் சட்டப்பேரவையை கலைக்க அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியதை தொடர்ந்து ஆளுநர் ஆரிப் முகமது கானை, முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்தார். நாளை அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்கள் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்தன.  இதையடுத்து புதிய அரசை அமைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக பதவி விலகும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கடைசி அமைச்சரவை கூட்டம் நேற்று பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவையை கலைக்க முதல்வர் நிதிஷ்குமாருக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டம் சுமார் 10 நிமிடங்கள் நடந்தது.

இந்த கூட்டத்தில் சட்டப்பேரவையை கலைக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டம் குறித்து ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவரும், பீகார் நாடாளுமன்ற விவகார அமைச்சருமான விஜய் சவுத்ரி கூறுகையில்,’ பீகாரில் புதிய அரசு பதவி ஏற்க வசதியாக தற்போதைய சட்டப்பேரவையை கலைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மகத்தான வெற்றிக்கு காரணமான முதல்வர் நிதிஷ்குமாருக்கு நன்றி தெரிவிக்கும் மற்றொரு தீர்மானத்தை அமைச்சரவை நிறைவேற்றியது. நிதிஷ் குமார் தலைமையில் பீகாரில் கூட்டணியின் சிறந்த செயல்திறன் இதுவாகும். இது பீகார் அரசின் தொலைநோக்கு கொள்கைகளால் சாத்தியமானது’ என்றார். அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் நிதிஷ்குமார் உடனடியாக கவர்னர் மாளிகை சென்று, ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்து அமைச்சரவையின் முடிவு குறித்து அவருக்குத் தெரிவித்தார்.

அவருடன் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, தலைமைச் செயலாளர் பிரத்யாய அம்ரித் ஆகியோர் சென்றனர். பீகாரில் புதிய அரசு பதவி ஏற்க வசதியாக நாளை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக நிதிஷ்குமார் அப்போது ஆளுநர் ஆரிப் முகமது கானிடம் தெரிவித்தார். இதை அவரும் ஏற்றுக்கொண்டார். முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சி புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் சட்டப்பேரவை கட்சி தலைவராக மீண்டும் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கிடையே புதிதாக தேர்வு செய்யப்பட்ட பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று பாட்னாவில் நடைபெற உள்ளது. தனிப்பெரும் கட்சியாக பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 89 இடங்கள் வென்ற பா.ஜ இதுவரை புதிய முதல்வர் தேர்வு குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை.

பீகார் பா.ஜ தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் கூறுகையில்,’ புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் சட்டப்பேரவை கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க இன்று கூடுவார்கள். பெரும்பாலும், புதிய அரசின் பதவியேற்பு விழா நவம்பர் 20 அல்லது நவம்பர் 21 ஆம் தேதி நடைபெறும். பதவியேற்பு நிகழ்விற்கான ஏற்பாடுகள் பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடந்து வருகின்றன. இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியின் பல உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு

பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டார். ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று பாட்னாவில் நடந்தது. அந்த கூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் லாலுபிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, தேஜஸ்வி சகோதரி மிசாபாரதி, மூத்த தலைவர் ஜெகநாத்சிங் ஆகியோர் பங்கேற்றனர். எந்தவொரு சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட, அவையின் மொத்த உறுப்பினர்களில் குறைந்தது 10 சதவீதத்தைப் பெற வேண்டும். பீகார் தேர்தலில் ஆர்ஜேடி 25 இடங்களைப் பெற்றது. இதையடுத்து தேஜஸ்வியாதவ் பீகார் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவார்.

தேஜஸ்வியை வெற்றி பெற வைக்க போராடிய பா.ஜ, தேர்தல் ஆணையம்

தேஜஸ்வி யாதவின் வெற்றியை உறுதி செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையமும் பாஜவும் போராடியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் நேற்று குற்றம் சாட்டினார். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் லாலுபிரசாத் குடும்பத்தின் பாரம்பரியம்மிக்க ராகோபூர் தொகுதியில் போட்டியிட்ட தேஜஸ்வியாதவ் 23 சுற்றுவரை சுமார் 10 ஆயிரம் ஓட்டுகள்பின்தங்கியிருந்தார். ஆனால் கடைசி 7 சுற்றில் அனைத்தும் மாறியது. இறுதியில் 14,532 ஓட்டு வித்தியாசத்தில் தேஜஸ்வி வெற்றி பெற்றார். இதுபற்றி உதித்ராஜ் கூறுகையில்,’ தேஜஸ்வி யாதவ் தேர்தலில் வெற்றி பெறவில்லை, ஆனால் பாஜ மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் அவரது வெற்றியை உறுதி செய்தனர்.

ஏனெனில் அவர் மாலை வரை பின்தங்கியிருந்தார். பீகார் தேர்தலை நியாயமான தேர்தல் என்பதை வெளி உலகிற்கு காட்ட தேஜஸ்வியாதவ் வெற்றி பெறுவதை உறுதி செய்தனர். எஸ்.ஐ.ஆர் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பா.ஜ வெற்றியைப் பெறுவதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை இந்திய அரசியலமைப்பை அழித்துவிடும். தேர்தல்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டன. அங்கு என்ன நடக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்’ என்றார்.

மஞ்சி, உபேந்திர குஷ்வாஹா தர்மேந்திர பிரதானுடன் சந்திப்பு

பீகாரில் புதிய அரசு அமைப்பதற்கு முன்பு இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சி மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா தலைவர் உபேந்திர குஷ்வாஹா ஆகியோர் டெல்லியில் நேற்று பீகார் பாஜ தேர்தல் பொறுப்பாளராக இருந்த ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை அவரது இல்லத்தில் தனித்தனியாக சந்தித்தனர். அப்போது பீகார் பாஜ அரசியல் விவகாரப் பொறுப்பாளர் வினோத் தவ்டேவும் உடனிருந்தார்.