கொடைக்கானல்: நிர்மலா சீதாராமனை முன்னுதாரணமாக கொண்டு பொருளாதார நுணுக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 32வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு 376 மாணவிகளுக்கு இளங்கலை, முதுகலை, டாக்டர் பட்டங்களை வழங்கி பேசியதாவது: நாம் அனைவரும் பெரிய காரியங்களை செய்ய முடியாது, ஆனால் நாம் சிறிய விஷயங்களை மிகுந்த அன்புடன் செய்ய முடியும் என்ற அன்னை தெரசாவின் கூற்றினை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். கல்வி என்பது மாற்றத்திற்கான தன்னம்பிக்கையை உருவாக்குகிறது. நாவின் சுதந்திரத்தை கல்வி உங்களுக்கு வழங்குகிறது. நாம் பார்த்து வியக்கும் வகையில் பெண் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். அவரை முன்னுதாரணமாக எடுத்து கொண்டு நாம் பொருளாதார நுணுக்கங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான கோவி.செழியன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
+
Advertisement
