Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிர்மலா சீதாராமன் - அண்ணாமலை மோதல்; டெல்லியில் அமித்ஷா நாளை பஞ்சாயத்து

சென்னை: நிர்மலா சீதாராமன்-அண்ணாமலை மோதல் குறித்து டெல்லியில் அமித்ஷா, நட்டா ஆகியோர் நாளை பஞ்சாயத்து செய்ய திட்டமிட்டுள்ளனர். தமிழக பாஜவில் அண்ணாமலைக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. நிர்மலாவுக்கு வேண்டிய கே.டி.ராகவன் உள்ளிட்ட பலரையும் கட்சியில் ஓரங்கட்டினார். இதனால் கட்சிக்குள்ளும் கடும் புகைச்சல் ஏற்பட்டது.

இந்நிலையில்தான் மக்களவை தேர்தலுக்கு முன்னர் கோவையில் முக்கிய தொழில் அதிபர்களுடன் நிதி அமைச்சர் என்ற முறையில் நிர்மலா சீதாராமன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் பேசும்போது, கிரீம் பன் குறித்து பேசினார். பன்னில் தடவும் கிரீமுக்கும் ஜிஎஸ்டி போடப்படுகிறது என்று நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவை வெளியிட்டது அண்ணாமலை ஆதரவாளர்கள் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சம்பவத்தால் அண்ணாமலை மீது நிர்மலா சீதாராமன் கடும்கோபத்தில் இருந்தார். இந்நிலையில்தான் இரு நாட்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்த நிர்மலா, கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அண்ணாமலையை மறைமுகமாக திட்டினார். கோவையில் நடந்த சம்பவம் குறித்தும், கட்சியினரை அவர் மதிக்காதது குறித்தும் பேசினார். ராமநாதபுரத்தில் மாவட்ட செயலாளர் எதிர்ப்பு தெரிவித்ததும் குறித்து பேசினார். இந்த கூட்டத்தை அண்ணாமலையும் சென்னையில் இருந்து கொண்டே புறக்கணித்தார். இது பாஜவில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியானதும், தனது ஆதரவாளர்களை அழைத்து நடந்தது குறித்து அவர் கேட்டுள்ளார். பின்னர் தான் இல்லாத கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் எப்படி என்னைப்பற்றி பேசலாம் என்று கூறி டெல்லியில் புகார் செய்துள்ளார். அதை தொடர்ந்து, நாளை டெல்லியில் தமிழக பாஜ உயர்மட்ட குழு கூட்டம் நடைபெறும் என்று நட்டா அறிவித்துள்ளார்.

தமிழக பாஜவைச் சேர்ந்த உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். மேலும், தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜ இருப்பதால் தேர்தலை இரு கட்சிகளும் சுமுகமாக நடத்த தேர்தல் பணிக்குழு அமைப்பது, வெற்றி பெறுவதற்கு சாதகமான சட்டமன்ற தொகுதிகளை தேர்வு செய்வது, தேர்தல் திட்டங்களை வகுப்பது, சட்டமன்றத் தேர்தலுக்கு தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்வது, உட்கட்சி பூசல், அதிமுகவுடன் கூட்டணிக்கு ஒருங்கிணைப்பு குழு பாஜவில் அமைப்பது, மேலும் என்டிஏ கூட்டணியில், தேமுதிக உள்ளிட்ட உதிர்கட்சிகளை பாஜ அணியில் சேர்ப்பது, அதிமுகவுடன் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றக்கூடிய பாஜ தலைவர்களை தேர்ந்தெடுப்பது, தமிழகம் முழுதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சட்டமன்ற பொறுப்பாளர்களை அறிவிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இந்த கூட்டத்தில் பேச டெல்லி தலைமை முடிவு செய்துள்ளது.

மேலும் மிக முக்கியமாக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அண்ணாமலை மோதல் குறித்தும், அண்ணாமலையின் வார் ரூம், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்பாடு செய்துள்ள வார் ரூம், உறுப்பினர்களுக்கிடையே எழுந்துள்ள மோதல் குறித்தும், அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக டெல்லி பாஜ தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இது தமிழக பாஜவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.