சென்னை: தேசிய ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிப்ட்) 14வது பட்டமளிப்பு விழாவில் 284 பேர் பட்டம் பெற்றனர். சென்னை தரமணியில் உள்ள நிப்ட்-டின் 14வது பட்டமளிப்பு விழா அந்நிறுவனத்தில் உள்ள திருவள்ளுவர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் கைத்தறி, துணி நூல், கைவினைப்பொருள், ஜவுளி மற்றும் காதி துறையின் செயலர் அமுதவல்லி கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள், விருதுகள் மற்றும் பட்டங்களை வழங்கினார். பேஷன் டெக்னாலஜி இளநிலை படிப்பில் 250 பேர், முதுநிலை படிப்பில் 34 பேர் என மொத்தம் 284 பேர் பட்டம் பெற்றனர். நிப்ட் முன்னாள் மாணவரும் , ஜேக்கப் அண்ட் க்லூஸ்டர் பார்ம்ஸ் நிறுவனத்தின் தலைமை புதுமை கண்டுபிடிப்பு அலுவலருமான ஷாமி ஜேக்கப் உள்ளிட்டோர் பேசினர். டீன் நூபுர் ஆனந்த் பட்டமளிப்பு உறுதிமொழி வாசித்தார். இயக்குநர் திவ்யா சத்யன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். இணை இயக்குநர் பிரவீன் நாகராஜன் நன்றி கூறினார். விழாவில் கல்வி ஒருங்கிணைப்பாளர் பீரகா செலாபதி, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டனர்.
+
Advertisement

