ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழையின் வேகம் குறைந்து காணப்பட்டது. ஒரு சில நாட்கள் வெயில் அடித்தது. தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, போர்த்தி மந்து, பைக்காரா போன்ற பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது.
இதனால், அணைகளின் நீர்மட்டம் மீண்டும் உயர துவங்கி உள்ளது.அதே சமயம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் சாரல் மழை மற்றும் மேகம் மூட்டம் காணப்படுவதால், குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.