Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நீலகிரி மாவட்டத்தில் விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை குன்னூர், கோத்தகிரியில் பல இடங்களில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு, காய்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கின

* தென்மாவட்டங்களிலும் 3வது நாளாக வெளுத்து வாங்கியது

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய இடியுடன் கொட்டிய கனமழை காரணமாக குன்னூர், கோத்தகிரியில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்தும் மண்சரிவும் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தென்மாவட்டங்களில் 3வது நாளாக மழை வெளுத்து வாங்கியது. தமிழ்நாட்டில் கடந்த 16ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் துவக்கம் முதலே வடகிழக்கு பருவமழை அதிரடியை காட்டியுள்ளது.

குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுதல் உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்பட்டன. இவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டது. இதனிடையே அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய இடியுடன் கனமழை பெய்தது. கனமழை காரணமாக மஞ்சூர் - கோவை சாலையில் ஓணிக்கண்டி பகுதியில் பக்கவாட்டு மண் திட்டு இடிந்து விழுந்து மண்சரிவு ஏற்பட்டது.

இதனால் இவ்வழியில் போக்குவரத்து பாதித்தது. கெத்தையில் இருந்து ஊட்டி செல்ல கூடிய அரசு பஸ், மஞ்சூர் - கோவை செல்ல கூடிய அரசு பஸ் உட்பட 3 பஸ்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டன. நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து சாலையை சீரமைத்தனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு பின் இவ்வழித்தடத்தில் போக்குவரத்து சீரானது. இதே வழித்தடத்தில் குந்தா, கெத்தை உள்ளிட்ட பகுதிகளில் சிறு சிறு மண்சரிவுகள் ஏற்பட்டன. இவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டன.

குன்னூர் - கோத்தகிரி சாலையில் வண்டிசோலை பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது. இதனை தீயணைப்புத்துறையினர் வெட்டி அகற்றினர். அப்போது அதே பகுதியில் சாலையில் நின்றிருந்த பிக்அப் வாகனம் மீது மரம் விழுந்தது. இதனால் அந்த வாகனம் லேசாக சேதமடைந்தது. இதேபோல் கெச்சிக்கட்டி - முள்ளிமலை சாலை, குன்னூர் அருகே காந்திபுரம் பகுதியில் ரயில் பாதை, வண்டிசோலை, மணியாபுரம், பெரிய பிக்கட்டி, கோத்தகிரி கிளப் சாலை, கோடநாடு, குயின்சோலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன.

இவை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டன. இதேபோல் சோலூர்மட்டம் அத்திக்கோடு,கூக்கல் அருகை மார்வளா, கட்டபெட்டு பகுதிகளில் சாலையின் குறுக்கே ராட்சத பாறைகள் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதித்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை மூலம் உடனுக்குடன் அகற்றப்பட்டன. குன்னூரில் 3 இடங்களிலும், கோத்தகிரியில் 2 இடங்களிலும் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்தன.

விடிய விடிய பெய்த கனமழையால் குன்னூர்,கோத்தகிரி பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் சேறும் சகதியுடன் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறி தோட்டங்களில் மழைநீர் புகுந்தது. இதனால் பயிரிடப்பட்டிருந்த கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறி தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோத்தகிரியில் 13 செ.மீ மழை பதிவானது.

திரூப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் மலை மேல் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்வதுண்டு. கடந்த சில தினங்களாக திருமூர்த்தி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. கனமழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த 3 தினங்களாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையின் காரணமாக தோணி ஆற்றில் கரைபுரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளம் பஞ்சலிங்க அருவி வழியாக அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் வளாகத்தை மூழ்கடித்தபடி திருமூர்த்தி அணைக்கு சென்றது. வழக்கமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் சிலைகள் அமைந்துள்ள கோயில் வளாகத்தில் மட்டுமே தண்ணீர் சூழ்ந்தபடி செல்லும்.

ஆனால், கட்டுக்கடங்காத வெள்ளம் காரணமாக அருகில் உள்ள விநாயகர் கோயில், சப்தகன்கன்னியர் கோயில்களையும் வெள்ளம் சூழ்ந்தது. தண்ணீர் வரத் துவங்கியதும் முருகன் கோயில் காவலாளி அங்கிருந்து வெளியேறி தப்பினார். நேற்று காலை வெள்ளம் குறைந்தது. பொள்ளாச்சி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் விடிய விடிய கன மழை பெய்தது. நேற்று காலையில் திடீரென பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கரை புரண்டு வேகமாக வந்த வெள்ளம், பொள்ளாச்சி அருகே பாலாற்றங்கரையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலை சூழ்ந்தது. அங்கிருந்த பக்தர்கள் சுதாரித்துக் கொண்டு வெளியேறினர். இதனிடையே கோயில் அருகே உள்ள தடுப்பு பகுதியை வெள்ளம் அடித்து சென்றது. அப்போது கோயிலுக்குள் இருவர் சிக்கி கொண்டனர். தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் கயிறு கட்டி இருவரையும் பத்திரமாக மீட்டனர். ஆஞ்சநேயர் கோயிலை சுற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி, சத்தியமங்கலம்,பவானி சாகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவு முதல் கன மழை பெய்து வருகிறது.பல இடங்களில் ஊருக்குள் மழைநீர் புகுந்தது. குறிப்பாக நம்பியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெய்யும் மழை நீரானது 100 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைத் தோட்டங்களுக்குள் புகுந்து சேதமானது. இதனால் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

வெள்ளப்பெருக்கு காரணமாக கொடிவேரி அணையை மூடப்பட்டது. அதே போன்று பவானி ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக பரவலாக கனமழை பெய்கிறது. இதனால் கண்மாய், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாலையம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கோவிலாங்குளம், காந்தி நகர், ராமானுஜபுரம், தட்டங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை பலத்த மழை கொட்டியது.

அதிகாலை 3 மணியிலிருந்து 4.30 மணி வரை சுமார் ஒன்றரை மணிநேரம் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பெரும்பாலான இடங்களில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், மழைநீர் செல்ல வழியின்றி வீடுகளை சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்தது. சில இடங்களில் வீடுகளில் மழை நீர் புகுந்தது. புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

இதன் காரணமாக சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு சாலையின் குறுக்கே நின்றதால் ராஜபாளையம் திருநெல்வேலி சாலையில் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து தடைபட்டது. சில இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. 21ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்கிறது. இதனால் 9வது நாளாக அருவியில் குளிக்கவும், அருவிப் பகுதிக்கு செல்லவும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, வருசநாடு அருகே கோம்பைத்தொழு கிராமத்தில் அமைந்துள்ள சின்னச்சுருளி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவிக்குச் செல்லும் சாலை பகுதியில் சாலையில் மண்ணரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

ராமேஸ்வரம் :ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அதிகாலை வரை பெய்த தொடர்மழையால் ராமேஸ்வரம் கொந்தமாதன பர்வதம் பகுதியில் உள்ள கொத்தனார் கருப்பையா என்பவர் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதேபோல் ஏர்காடு பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் வீட்டின் முன்பகுதி உடைந்து விழுந்தது.

குமரி: குமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 41.09 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 730 கன அடி தண்ணீர் வருகிறது. 361 கன அடி திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணை 62.3 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையில் 24.61 அடியாகவும் நீர்மட்டம் உள்ளது. இவ்வாறு தென் மாவட்டங்களில் 3வது நாளாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.

* பரிசல் கவிழ்ந்து பழங்குடி வாலிபர் பலி

உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பழங்குடியின கிராமங்களுக்கு காட்டாற்றை கடந்து செல்ல வேண்டும். நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தளிஞ்சியை சேர்ந்த மாரியப்பன்(40), அவரது தம்பி மது ஆகியோர் பரிசலில் ஆற்றை கடக்க முயன்றனர்.

அப்போது, நீரின் வேகம் காரணமாக பரிசல் கவிழ்ந்தது. இதில் மாரியப்பன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். மது நீரில் தத்தளித்தபடி மரத்தின் வேர்களை பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் அவரை பாதுகாப்புடன் மீட்டனர். நேற்று காலை சம்பவ இடத்தில் இருந்து அரை கிமீ தூரத்தில் மாரியப்பனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

* தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

மேட்டுப்பாளையம் -குன்னூர் இடையே ஹில் குரோவ் - கல்லாறு இடையே மலை ரயில் பாதையில் பாறைகளுடன் நேற்று முன்தினம் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இயக்க வேண்டிய மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. தற்போது அந்த பகுதியில் பாறைகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே சமயம் குன்னூர் - ஊட்டி இடையே தண்டவாளங்களில் சிறிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டதால் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு நேற்று காலை 7:45 மணிக்கு குன்னூரிலிருந்து ஊட்டிக்கு புறப்படும் மலை ரயில் காலை 9 மணிக்கு இயக்கப்பட்டது.தொடர்ந்து பாதிப்பின்றி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின் மறு அறிவிப்பு வரும் வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.

* குமுளி மலைச்சாலையில் 3வது பாலம் அருகே விரிசல்

தேனி மாவட்டம் லோயர்கேம்பில் இருந்து குமுளி செல்லும் மலைச்சாலையில், நேற்று மழை காரணமாக 3வது பாலம் அருகே விரிசல் விட்டிருப்பதை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை இயக்காமல் நிறுத்தி வைத்தனர். இதனால் சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் போலீசார், மலைச்சாலையில் விரிசல் விட்ட பகுதிக்கு வாகனங்கள் செல்லாதவாறு பேரிகார்டு அமைத்து ஒரு பக்கமாக வாகனங்கள் செல்லும் வகையில் தற்காலிக போக்குவரத்துக்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.

* அந்தரத்தில் தொங்கிய கேரளா சுற்றுலா பஸ் பயணிகள் உயிர் தப்பினர்

கோத்தகிரி அருகே மரளகம்பை பகுதியில் நேற்று கேரளா சுற்றுலா பயணிகள் சென்ற மினி பேருந்து மேடான பகுதியில் ஏற முடியாமல் போனதால், டிரைவர் பேருந்தில் இருந்தவர்களை இறங்கச் சொல்லி உள்ளார். மழை வெள்ளம் காரணமாக கிரிப் கிடைக்காததால், மெதுவாக வாகனத்தை பின்னோக்கி எடுக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து தேயிலைத் தோட்ட பள்ளத்தில் கவிழ்ந்து தொங்கியது. உடனடியாக டிரைவர் கீழே குதித்து தப்பித்தார். இதையடுத்து சுற்றுலா பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

* 300 ஏக்கர் பயிர் நாசம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் களிமேட்டுப்பட்டி, முல்லையாற்று பாலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதேபோல் கோம்பை மலை அடிவாரத்தில் பெய்த மழையின் காரணமாகவும் 18ம் கால்வாய் வழியாக வந்த தண்ணீர் முழுமையாக வெளியேறி கோம்பை சாலையில் வெள்ளமாக ஓடியது. உத்தமபாளையம், கோகிலாபுரம், ஆனைமலையான்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 300 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர்கள் சேதமடைந்தன.