நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தனியார் குடியிருப்பில் பகல் நேரத்தில் வளர்ப்பு நாயை வேட்டையாட வந்த சிறுத்தை
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மேல்தட்டப்பள்ளம் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் தற்போது பகல் நேரத்தில் வளர்ப்பு நாயை வேட்டையாட சிறுத்தை ஓன்று ஊருக்குள் வலம் வந்துள்ளது. பகல் நேரத்தில் உலா வந்த சம்பவம் குடியிருப்பு வாசிகளை பெரிதும் அச்சமடைய செய்துள்ள நிலையில் உடனே கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக உணவு தேடி பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
அவ்வாறு உலா வரும் சிறுத்தைகள் வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று பகல் நேரத்தில் கோத்தகிரி அருகே உள்ள மேல்தட்டப்பள்ளம் பகுதியில் வசித்து வரும் ஜான் கேசியோ என்பவரது குடியிருப்பில் புகுந்த சிறுத்தை நீண்ட நேரம் குடியிருப்பு வளாகத்தில் எவ்வித அச்சமும் இல்லாமல் உலா வந்துள்ளது. பின்னர் அவர்களது வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாயை கூண்டில் இருந்து வேட்டையாட முயற்சி செய்துள்ளது. நீண்ட நேரமாக போராடிய நிலையில் கூண்டில் இருந்த வளர்ப்பு நாயை வேட்டையாட முடியாமல் மீண்டும் வனப்பகுதிக்கு சென்றது. இந்த காட்சியை குடியிருப்பு வாசி கைப்பேசி மூலம் பதிவு செய்துள்ளார்.
இருப்பினும் எவ்வித அச்சமும் இல்லாமல் பகல் நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் சென்ற சிறுத்தையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் குடியிருப்பு வாசிகளை பெரிதும் அச்சமடைய செய்துள்ளது. இதற்கு தீர்வாக வனத்துறையினர் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.