கோபி: நீலகிரி மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திடீர் பயணமாக நள்ளிரவு சென்னை புறப்பட்டு சென்றார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 5ம் தேதி கோபியில் நிருபர்களிடம் கூறினார். இதற்கு 10 நாள் கால அவகாசம் அளித்திருந்தார். இந்நிலையில் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்பி சத்தியபாமா, ஒன்றிய செயலாளர்கள் குறிஞ்சிநாதன், தம்பி என்கிற சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட 10 பேரின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டிற்கு, ‘‘ஒருங்கிணைந்த அதிமுக, ஒன்றுபட்டால் வென்று காட்டுவோம்’’ என்ற வாசகங்கள் அடங்கிய பேனருடன் பலர் வந்திருந்தனர். நேற்று இரவு வரை கடந்த 7 நாட்களாக வீட்டைவிட்டு வெளியே செல்லாமல், அவருக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவினரை செங்கோட்டையன் சந்தித்து வந்தார்.
நள்ளிரவு 12 மணிக்கு வீட்டில் இருந்து திடீரென கிளம்பிய செங்கோட்டையன் சென்னை புறப்பட்டு சென்றார். சென்னையில் யாரை சந்திக்க சென்றார்? என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை 23ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்கான அவர் சித்தோடு, கவுந்தப்பாடி மற்றும் கோபி வழியாக செல்கிறார். கடந்த முறை எடப்பாடி பழனிச்சாமி மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்காக கோபி வழியாக சென்றபோது, வீட்டில் இருந்த செங்கோட்டையன் அவரை வரவேற்க செல்லாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. நாளையும் சர்ச்சை ஏற்படலாம் என்பதால் அதை தவிர்க்க சென்னை புறப்பட்டு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.