ஊட்டி : நீலகிரியில் ஒரு அறிவியல் மையத்தை துவங்க வேண்டும் என அறிவியல் கருத்தரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நீலகிரி மாவட்ட கிளை சார்பாக கோத்தகிரி அருகே உள்ள கேர்கம்பை கிராமத்தில் அமைந்துள்ள ஹில்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குவாண்டம் அறிவியலின் நூற்றாண்டினை முன்னிட்டு சிறப்பு அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் சந்தியா தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் முனைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே.ஜே.ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:
1925ம் ஆண்டில் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் தற்போது அறியப்பட்டுள்ள குவாண்டம் அறிவியலைக் குறித்து ஆய்வு செய்து குழப்பமான அறிவியல் இருப்பதாக கூறினார். அவர், தமது வாழ்நாள் முழுவதும் அந்த இயற்பியலை முழுவதுமாக கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார். கடைசி வரையில் அவரால் முழுமையாக கண்டறிய முடியவில்லை. அதன்பின், வந்த பல விஞ்ஞானிகள் இந்த நவீன குவாண்டம் அறிவியலை ஆராய்ச்சி சாலையில் ஆய்வு செய்து கண்டறிந்தனர்.
இந்த ஆண்டு அந்த அறிவியல் துறையின் நூறாவது ஆண்டாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. குவாண்டம் அறிவியலானது இந்த பிரபஞ்சம் முழுவதும் சில அறிவியல் விதிகளுக்கு உட்பட்டு தான் இயங்குகிறது எனக் கூறுகிறது.
அனைத்து உயிரினங்களின் பிறப்பு, இறப்பு உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகள் அனைத்தும் குவாண்டம் அறிவியலின் ஒரு பகுதியே என நிர்ணயம் செய்துள்ளது. இந்த அறிவியல் உலகில் உள்ள அனைத்து மதங்கள் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் கடவுள் நம்பிக்கையையும் படைப்பு கோட்பாட்டினையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது.
குவாண்டம் அறிவியல் அடுத்த சில ஆண்டுகளில் அறிவியல் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தப் போகிறது. நமது அன்றாட செயல்பாடுகள் நமது மூளையின் செயல்பாட்டின் ஒரு பகுதியே. நமது மூளையில் ஒரு கன மில்லி மீட்டர் பகுதி அதாவது ஒரு மணல் துகளில் அளவுள்ள பகுதியில் 16 ஆயிரம் நியூரான்களும் அவற்றிற்கிடையே ரூ.5 கோடி மின் இணைப்புகளும் உள்ளன.
உலகில் உள்ள அனைத்து இயக்கங்களும் மனித மூளைக்கு உட்பட்டவை. இந்த குவாண்டம் அறிவியலின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் நீலகிரியில் ஒரு அறிவியல் மையத்தை துவக்க வேண்டும். அதில் கோளரங்கம் வானியல் மற்றும் பிற அறிவியல் துறைகளில் மாதிரிகளை வைக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு 25 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்களுக்கு அறிவியல் குறித்த விழிப்புணர்வையும் ஊட்டும் வகையில் இந்த அறிவியல் மையம் அமைய வேண்டும். சாலை ஓரங்களில் வன புலி, யானை, வரையாடு போன்ற விலங்குகளின் உருவ பொம்மைகளை வைக்க வேண்டும்.
சுற்றுலா பயணிகள் அவற்றுடன் செல்பி எடுக்கும் போது சுற்றுச்சூழல் உணர்வும் ஏற்படும். மேலும் நீலகிரி மாவட்ட மாணவர்களுக்கு ஒரு அறிவுசார் மையமாகவும் அது அமையும். இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் உரிய கோரிக்கைகள் வைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக முதுகலை ஆசிரியை ஷர்மிளா அனைவரையும் வரவேற்றார்.