Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீலகிரி மாவட்டத்தில் 4வது நாளாக கனமழை சாலையில் உருண்டு விழுந்த பாறைகள்: 3வது நாளாக சுற்றுலாதலங்கள் மூடல்

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 4வது நாளாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. காய்கறி தோட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. சாலையில் உருண்டு விழுந்த பாறைகள், 40க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்த வண்ணம் உள்ளன. இதுவரை 40க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளன. 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல் மின் விநியோகமும் பல இடங்களில் பாதிக்கப்பட்டது.

மஞ்சூர் அருகே மழையுடன் சூறாவளி காற்றும் வீசியதால் கிண்ணக்கொரை, அப்பர் பவானி, பிக்கட்டி, குந்தாபாலம் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் விழுந்தன. மஞ்சூரை அடுத்துள்ள சேரனூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையில் மாரியம்மன் கோயில் வளாகத்தை சுற்றிலும் கட்டப்பட்டிருந்த தடுப்புச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதேபோல குடியிருப்பு பகுதிகளிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

பிக்கட்டி எடக்காடு சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குந்தா முக்கிமலை சாலையில் மண் சரிவுடன் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர், சாலை பணியாளர்கள் ஜேசிபி இயந்திரத்துடன் சென்று மண் சரிவு மற்றும் மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

கிண்ணக்கொரை சாலையில் பல இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போலீசார், மாநில பேரிடர் மீட்பு படையினர் சென்று மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். குந்தா எஸ்டேட் பகுதியில் பெய்த பலத்த மழையில் பெரிய கற்பூர மரம் ஒன்று சாய்ந்து எஸ்டேட் அலுவலகம் முன்பு நிறுத்தி இருந்த பிக்கப் வாகனத்தின் மீது விழுந்தது. பல்வேநு பகுதிகளில் மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் மின் கம்பிகள் அறுந்து மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

குன்னூர் அருகே கெந்தளா பகுதியில் இருந்து காட்டேரி அணை செல்லும் சாலையில் பாறைகள் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து உருண்டு சாலையின் நடுவே விழுந்தன. அதிர்ஷ்டவசமாக அச்சமயத்தில் வாகனங்கள் செல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மழை, காற்றின் காரணமாக மரங்கள் விழுந்து வருவதால் மாவட்டத்தில் 3வது நாளாக நேற்று சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.

பிற்பகலுக்கு மேல் ஊட்டியில் மழையின் தாக்கம் சற்று குறைந்திருந்த நிலையில், சுற்றுலா பயணிகள் பார்வையிட தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டது. ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான முத்தோரை பாலாடா, கப்பத்தொரை, கேத்தி பாலாடா, கோலனி மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

தொடர்மழை காரணமாக இந்த காய்கறி தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. கப்பத்தொரை, பெம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கேரட் உள்ளிட்ட காய்கறிகளை அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு அனுப்பும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக அவலாஞ்சியில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்றும் நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது.

* கொடைக்கானலில் சூறைக்காற்றுடன் மழை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 4 நாட்களாக சூறைக்காற்றுடன் சாரல் மழை, கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன. நேற்று காலை கொடைக்கானல் மேல்மலை கூக்கால் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில் கூக்கால் பிரதான சாலையில் பெரிய மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றி சுமார் 3 மணி நேரத்திற்கு பின் போக்குவரத்தை சீர்செய்தனர்.

கொடைக்கானல் நகர் பகுதியில் வேகமாக வீசிய காற்றால் அரசு மருத்துவமனை அருகே குடியிருப்பு பகுதிக்கு அருகே இருந்த ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் ஒரு வீட்டின் சுற்றுச்சுவரும் சேதமடைந்தது. கொடைக்கானலில் தொடர் சூறைக்காற்று, மழை காரணமாக நட்சத்திர ஏரியில் நேற்று நடைபெற இருந்த அலங்கார படகு போட்டிகள் ரத்து செய்யப்பட்டதாக சுற்றுலாத்துறையினர் தெரிவித்தனர். அதேபோல 3வது நாளாக நேற்றும் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

* மழைநீரில் மூழ்கிய கிராமம்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி சத்தனம்மா குன்னு பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்து நடைபாதைகள் தண்ணீரில் மூழ்கின. மேடான பகுதியில் குடியிருக்கும் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீட்டில் முடங்கினர். ஒரு சிலர் இடுப்பளவு தண்ணீரில் நடந்து பிற பகுதிகளுக்கு சென்றனர். அதிகாரிகள் சென்று இயந்திரம் பயன்படுத்தி கால்வாய் தோண்டி மழை நீரை அருகே உள்ள நீரோடையில் சேர்த்தனர். பின்னர் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

* குமரி, குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு தடை

குமரி மாவட்ட கடற்கரைகளுக்கு ெரட் அலர்ட் கொடுக்கப்பட்டு இருப்பதால், நேற்று காலை முதல் கடற்கரை பகுதிகளிலும் போலீசார் கண்காணித்தனர். கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கடற்கரைகளில் இறங்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குற்றாலத்தில் தொடரும் மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், 3வது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதிக்கவில்லை. வெளியூர்களில் இருந்து வந்திருந்தவர்கள், அருவியை பார்வையிட்டு குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

* அமராவதி ஆற்றில் ராட்சத முதலை குட்டிகளுடன் உலா

கடந்த 2001ல் அமராவதி அணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, முதலை பண்ணையில் இருந்தும், அணையில் இருந்தும் ஏராளமான முதலைகள் ஆற்று நீரில் அடித்து வரப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அமராவதி கரையோரம் உலா வரும் முதலைகள், அலங்கியம், சீதக்காடு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. இதில் 2 முதலைகளை கடந்த சில மாதங்களுக்கு முன் வனத்துறையினர் 10 நாட்கள் போராடி பிடித்து சென்றனர். இந்நிலையில் நேற்று காலை 12 அடி நீள முதலை 6 குட்டிகளுடன் அலங்கியம் அமராவதி பாலத்தின் அருகே கரையோரம் உள்ள பாறை மீது ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது.

இதை அந்த வழியாக சென்ற விவசாய கூலித் தொழிலாளர்கள் பார்த்து பீதியுடன் ஓடி வந்துவிட்டனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அமராவதி ஆறு முழுவதும் ஆங்காங்கே கரை ஒதுங்கி அச்சுறுத்தி வரும் முதலைகள் அனைத்தையும் வனத்துறையினர் பிடித்துச் செல்ல வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அணைப்பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலம் நேற்று தண்ணீரில் மூழ்கியது.