Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீலகிரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்

*பொதுமக்களுக்கு எஸ்பி அறிவுறுத்தல்

ஊட்டி நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள், புழக்கம் மற்றும் கள்ளச்சாராய விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி அறிவுறுத்தி உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தியதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் பல்வேறு மாவட்டங்களிலும் அதிரடி ஆய்வு செய்து கள்ளச்சாராய ஊறல்களை அழித்து வருகின்றனர்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலும் மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் உத்தரவின்பேரில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் தயாரித்ததாக 3 பேரை காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள், விற்பனை செய்தவர்கள் விவரங்கள் அந்தந்த காவல் நிலையங்களில் உள்ளன.

கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து அவர்களை கண்காணிக்கும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கிராமப்புறங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வது தெரியவந்தால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் ஊட்டி பி1 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாம்பேகேசில் பகுதியில் கிராம கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. இதில் பாம்பேகேசில் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் பங்கேற்று பேசுகையில், ‘‘சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்களைப் பற்றி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போதை பொருள் புழக்கம், கள்ளச்சாராயம் தயாரிப்பு, விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் 10581 என்ற இலவச எண்ணிலும், நீலகிரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் செயல்படும் 9789800100 எண்ணிற்கும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்’’ என்றார்.

தொடர்ந்து போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கூடுதல் எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், ஊட்டி தாசில்தார் சரவணகுமார், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் இதுபோன்ற கிராம கண்காணிப்பு குழு கூட்டங்கள் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் நடத்த காவல்துறை சார்பில் திட்டமிடபட்டுள்ளது. இதில் காவல்துறையினர் மட்டுமில்லாமல் வருவாய் துறையினரும் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டது.

மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் எஸ்பி சவுந்திரராஜன் தலைமையில் காவல்துறையினர் கோத்தகிரி அருகேயுள்ள கிளிப்பி, வாகைபண்ணை, கொழிக்கரை, கொழித்தொரை, செம்மனாரை உள்ளிட்ட பகுதிகளில் கள்ள சாராய சோதனை மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதேபோல் காவல்துறை சார்பில் எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம் என்ற தலைப்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டி ஏடிசி சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.