நீலகிரி கலை அறிவியல் கல்லூரியில் பழங்குடியினர் பாரம்பரிய நடனத்துடன் நெல் நாற்றுநடவு பணியில் மாணவர்கள்
பந்தலூர் : பந்தலூர் அருகே நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பழங்குடியினர் பாரம்பரிய நடனத்துடன் நெல் நாற்றுநடவு செய்யும் பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். பந்தலூர் அருகே தாளூர் பகுதியில் அமைந்துள்ள நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு கல்வி கற்கும் நேரத்தை தவிர ஓய்வு நேரங்களில் விளையாட்டு மற்றும் வேளாண்மை தொடர்பான கல்வியை கற்பித்து வருகின்றனர்.
கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் காய்கறி மற்றும் இயற்கை முறையில் நெல் உற்பத்தி செய்யும் பணிகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கல்லூரி வலாகத்தில் உள்ள வயலை உளுது நெல் நாற்றுநடவு செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
நிகழ்வில் கல்லூரி நிர்வாக இயக்குனர் ராசித்கஷாலி, கல்லூரி முதல்வர் பாலசண்முகதேவி, துணை முதல்வர் ரஞ்சித், பேராசிரியர்கள் மோகன்பாபு, தன்யா, செரில் வர்கீஷ், வளாக மேலாளர் உம்மர் மற்றும் பேராசிரியர்கள் பழங்குடியினரின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியுடன் ஆடிப்பாடி நெல் நாற்றுநடவு செய்தனர்.
நிகழ்ச்சியில், மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு நாற்று நடவு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாக இயக்குனர் ராசித்கஷாலி கூறுகையில்,‘‘மாணவர்களுக்கு கல்வி என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் விவசாயம் செய்யவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் கல்லூரி வளாகத்தில் உள்ள இடங்களில் காய்கறி மற்றும் நெல் உற்பத்தி செய்வது, அதனை அறுவடை செய்வது போன்ற பணிகளிலும் ஈடுபடுத்தி வருகிறோம்’’ என்றார்.