Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் குறைந்த விலைக்கு உருளைக்கிழங்கு ஏலம் விவசாயிகள் எதிர்ப்பால் பாதியில் நிறுத்தம்

மேட்டுப்பாளையம் : நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உருளைக்கிழங்கு குறைந்த விலைக்கு ஏலம் போன நிலையில் விவசாயிகள் எதிர்ப்பால் பாதியில் நிறுத்தப்பட்டது.

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் கடந்த 1935 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

இச்சங்கத்தில் 618 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு குன்னூர்,ஊட்டி, கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் உருளைக்கிழங்குகள் அறுவடை செய்யப்பட்டு லாரிகள் மூலம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

அவ்வாறு விற்பனைக்காக கொண்டு வரப்படும் உருளைக்கிழங்குகள் ஊழியர்களால் தரம் பிரிக்கப்பட்டு 45 கிலோ கொண்ட மூட்டைகளாக கட்டி வைக்கப்படுகின்றன. பின்னர், உருளைக்கிழங்கின் தரத்திற்கு ஏற்ப வியாபாரிகள் ஏல முறையில் விற்பனைக்காக வாங்கிச்செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இச்சங்கத்திற்கு 22 லோடுகள் (சுமார் 198 டன்) உருளைக்கிழங்குகள் விவசாயிகளால் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.இதனால் 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை உருளைக்கிழங்கு அதிகபட்சமாக ரூ.1880 க்கும்,குறைந்தபட்சமாக ரூ.1000க்கும் விற்பனையானது.

இதனிடையே நேற்று நடைபெற்ற ஏலத்தின் போது மொத்தமாக 34 லோடுகள் (சுமார் 306 டன்) உருளைக்கிழங்குகளை நீலகிரி மாவட்ட விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

அப்போது, நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.1440க்கும், குறைந்தபட்சமாக ரூ.1060க்கும் விற்பனையானது. இதனால் தங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனக்கூறி விவசாயிகள் சங்க அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் ஏலம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் கூட்டுறவு சங்க சார்பதிவாளரும், மேலாளருமான நிசார் நடத்திய பேச்சுவார்த்தையில் நீலகிரி மாவட்டத்தில் தற்போது அதிக விளைச்சல் காரணமாக மேட்டுப்பாளையம் சங்கத்திற்கு உருளைக்கிழங்கின் வரத்து அதிகரித்துள்ளது.

இதேபோல் நீலகிரி மாவட்ட விவசாயிகள் மூலமாக வெளி உருளைக்கிழங்கு மண்டிகளுக்கும் 70 லோடு (சுமார் 630 டன்) உருளைக்கிழங்கு வரத்து உள்ளது.இங்கிருந்து உருளைக்கிழங்குகளை வாங்கிச்செல்லும் வியாபாரிகள் அண்டை மாவட்டமான கேரளாவிற்கும், இலங்கை, மாலத்தீவு, துபாய், பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். தற்போது இலங்கையில் வெள்ளம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஊட்டி உருளைக்கிழங்கிற்கு கிராக்கி குறைவாகவே உள்ளது.

இதனால் உருளைக்கிழங்கு ஏலத்தில் கலந்து கொள்ள வியாபாரிகள் அதிகமாக ஆர்வம் காட்டவில்லை. எனவே, ஊட்டி உருளைக்கிழங்கு குறைவான விலைக்கு விற்பனையாகிறது.

எனவே, ஒரு நாள் தாமதமாக நாளை (டிச.10) ஏலத்தை நடத்திக்கொள்ளலாம் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.