நியாமி: நைஜர் நாட்டில் பயங்கரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் கடத்தப்பட்டார். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் தலைநகர் நியாமியில் இருந்து 130 கிமீ தொலைவில் டோசோ என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு நடந்து வரும் கட்டுமான பணிகளுக்கு ராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 15ம் தேதி பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு இந்தியரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் கர்மாலி (39) என அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றொருவர் தென்மாநிலத்தை கிருஷ்ணன் எனத் தெரியவந்துள்ளது.
காஷ்மீரைச் சேர்ந்த ரஞ்சித் சிங் என்பவர் கடத்தப்பட்டுள்ளார். நைஜரில் உள்ள இந்தியத் தூதரகம் கொல்லப்பட்ட இந்தியர்களின் உடல்களை இந்தியா கொண்டு வரவும், கடத்தப்பட்ட இந்தியரை பாதுகாப்பாக மீட்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக நைஜரிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், நைஜர் நாட்டில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.