நாகர்கோவில்: நாகர்கோவிலில் தொழிலதிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை சோதனை மேற்கொண்டனர். இதையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. நாகர்கோவில் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் ரஷித் அகமது (62). சென்னையில் கட்டிட காண்ட்ராக்ட் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். ஆகவே குடும்பத்துடன் சென்னையில் தங்கி உள்ளார். நாகர்கோவிலில் உள்ள இவரது வீட்டில் அவரது மகன் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்ைன சென்று இருந்தனர். இந்தநிலையில் இந்த வீட்டுக்கு இன்று காலையில் சென்னையில் இருந்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் வந்தனர்.
காலை சுமார் 6 மணி முதல் இந்த வீட்டுக்குள் சென்று சோதனையை தொடங்கினர். சோதனையை தொடர்ந்து ரஷித் அகமது வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. சுமார் மூன்றரை மணி நேரம் வரை நடைபெற்ற சோதனை, காலை 9.30க்கு முடிவடைந்தது. இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்கள் எதுவும் சிக்கியதா? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் எதுவும் முழுமையாக தெரிவிக்கவில்லை. சோதனை ஏன்? என்பது குறித்து என்.ஐ.ஏ. வட்டாரத்தில் விசாரித்த போது, தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புக்கு உதவி செய்ததாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணம் விசாகா நகர் காவல் நிலையத்தில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அவர்களின் செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்த போது, அவர்கள் ரஷித் அகமதுவின் குடும்ப உறுப்பினர் ஒருவருடன் பேசி இருந்தது தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடக்கிறது. சோதனை விபரங்களை சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்துக்கு தெரிவிப்போம் என்றனர். என்.ஐ.ஏ. நடத்திய இந்த சோதனையால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.