என்.ஐ.ஏ. வழக்குகளில் 6 மாதத்தில் கட்டாயம் விசாரணையை முடிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: என்.ஐ.ஏ. வழக்குகளில் 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் இதற்கான சிறப்பு நீதிமன்றங்களை விரைந்து அமைக்கவேண்டும் என்றும் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய புலனாய்வு முகாமை தொடர்பான வழக்கை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நீண்ட நாட்கள் ஜாமின் பெறுவதற்காக காத்திருப்பதை தவிர்க்க வேண்டும். என்.ஐ.ஏ., ஆறு மாதங்களில் வழக்கு விசாரணைகளை முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து டிசம்பர் 16 ஆம் தேதிக்கு முன்பு ஒன்றிய உள்துறை முடிவு எடுத்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டனர்.
டெல்லியில் மட்டும் 50 என்.ஐ.ஏ., வழக்குகள் நிலுவையில் உள்ளதை டெல்லி உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்துக்கு தெரிவித்திருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினார். டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் 48 வழக்குகளும், கர்கட்டோமா நீதிமன்றத்தில் 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மற்ற வழக்குகளுடன் சேர்த்து இந்த வழக்குகளை விசாரிப்பது என்பது வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும். எனவே, தனி நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்து வழக்கு விசாரணை டிசம்பர் 16ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.


