Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அடுத்த மணிமகுடம்

ஒரு நாட்டின் மக்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரம் இரண்டுமே மிக முக்கியமானவை. கல்வி அறிவை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகிறது. சுகாதாரம், உடல் மற்றும் மனநலத்தை பேணுவதற்கு இன்றியமையாதது. இவை இரண்டும் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான இரட்டைக் கூறுகளாக இருந்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டு தான் தமிழ்நாடு அரசு கல்வி மற்றும் சுகாதாரம் என இரண்டிற்கும் அதிக முக்கியத்துவத்தை அளித்து மக்கள் பயன்பெறும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

இதில் சுகாதாரத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் இணைந்துள்ளது. முழு உடல் பரிசோதனை செய்யும் இத்திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் இன்று தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்டம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காப்போம் 48 போன்ற பல்வேறு சுகாதார திட்டங்களின் வரிசையில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் இணைந்துள்ளது.

வழக்கமாக, முழு உடல் பரிசோதனை செய்வதற்கு தனியார் மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் செலவாகும். ஏழை, எளிய பாமர மக்களால் இந்த பரிசோதனைகளை செய்ய இயலாது. இதனை தவிர்க்கும் பொருட்டு, மக்களை தேடிச்சென்று முழு உடல் பரிசோதனை செய்யும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பொதுமருத்துவம், அறுவை சிகிச்சை உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகள் அனைத்தும் இத்திட்டத்தில் இடம்பெறுகின்றன.

ஏற்கனவே, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் ஏழை-எளிய மற்றும் நடுத்தர வருமானம் பெறுகிற குடும்பங்களுக்கு, தரமான மருத்துவ சிகிச்சைகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக பெற வழிவகை செய்கிறது.

ஆபத்தான பல நோய்களுக்கு அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் முதன்மை திட்டமான ‘மக்களை தேடி மருத்துவம்’ (MTM) என்னும் திட்டம் சுகாதார சேவையை மக்களின் வீட்டு வாசலுக்கே நேரடியாக கொண்டு செல்வதால், மாநிலத்தில் உயர் ரத்தஅழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை கையாள்வதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மக்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு, உடல் ஆேராக்கியம் பேண வழிவகை செய்கிறது.

இப்படி அடுத்தடுத்து அதிரடி திட்டங்களை கொண்டுவந்து, தமிழக மக்கள் நலன்காக்கும் அரசின் உன்னத திட்டமான ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம், அடுத்த வெற்றி மணிமகுடமாக அமைந்துள்ளது. பொதுவாக, தமிழக முதல்வரின் அசத்தல் திட்டங்களாக கருதப்படுவது ‘‘கலைஞர் மகளிர் உரிமை திட்டம்”, ‘‘முதலமைச்சரின் காலை உணவு திட்டம்”, ‘‘நான் முதல்வன் திட்டம்”, ‘‘புதுமைப்பெண் திட்டம்” மற்றும் ‘‘விடியல் பயணம்” போன்ற திட்டங்கள் ஆகும்.

அவை எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளும் வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் முன்வரிசையில் நிற்கிறது. இதன் தலைப்பில், தமிழக முதல்வரின் பெயர் இணைந்திருப்பதால், ‘‘நலம் காக்கும் ஸ்டாலின்” என்னும் இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக நீதிமன்றம் வரை சென்றது. ஆனால், இத்திட்டத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ‘மக்கள் பணியே மகேசன் பணி’ என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக நிற்பதால், நீதிமன்றமும் துணை நிற்கிறது. இது, இத்திட்டத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.