Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அடுத்த மாதம் 3ம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு..!!

சென்னை: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு செப். 3ம் தேதி தமிழகம் வருகிறார். திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 3,000 மாணவர்கள் 64 பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் 3ம் தேதி காலையில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார். இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக 3ம் தேதி காலை டெல்லியில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வரும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட்டில் பகல் 12.30 மணியளவில் வந்து இறங்குகிறார்.

பின்னர் அங்கு மதிய உணவிற்கு பின்னர் 2.30 மணி முதல் 3.30 மணி வரையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் அவர் மத்திய பல்கலைக்கழகங்கள் அளவில் கோல்டுமெடல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் வருகிறார்.

ஸ்ரீரங்கத்தில் பிரத்யேக ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கி பின்னர் அங்கிருந்து காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் ஸ்ரீரங்கத்தில் இருந்து காரில் திருச்சி விமான நிலையத்துக்கு செல்லும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். குடியரசு தலைவரின் திருச்சி மற்றும் திருவாரூர் வருகையையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.