Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் புதிய புயல்; ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் 500% வரி? இந்தியா, சீனாவுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் 500% வரி விதிக்கப்படும் என்று இந்தியா, சீனாவுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்தில் பிரேசில் மீது 50%, கனடா மீது 35%, பிலிப்பைன்ஸ், இலங்கை, லிபியா உள்ளிட்ட மேலும் ஏழு நாடுகள் மீது புதிய வரிகளை விதிப்பதாக அறிவித்து, உலக வர்த்தகச் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இந்த வரிகள் அனைத்தும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகள், அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் கடுமையான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அதிபர் டிரம்ப் தற்போது மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையை சூசகமாகத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் யுரேனியம் போன்ற எரிசக்திப் பொருட்களை வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது 500% வரை இறக்குமதி வரி விதிக்கும் திட்டத்தை தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, ரஷ்ய அதிபர் புதினுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ரஷ்யாவின் எரிசக்தி வருவாயைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது. முன்னதாக ‘ரஷ்யாவுக்குத் தடை விதிக்கும் சட்டம் 2025’ என்ற பெயரில், குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் மற்றும் ஜனநாயகக் கட்சி செனட்டர் ரிச்சர்ட் ப்ளூமென்ந்தால் ஆகியோரால் கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க செனட் சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுகுறித்துப் பேசிய டிரம்ப், ‘இந்த மசோதாவை நிறைவேற்றினாலும், நிறைவேற்றாவிட்டாலும், இதைச் செயல்படுத்துவதும் தடுப்பதும் முற்றிலும் எனது முடிவாகவே இருக்கும். இப்போது இதைத் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறேன்’ என்று கூறியுள்ளார். இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால், அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகளில் பெரும் பின்னடைவு ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.