புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை டிச.15ம் தேதி முதல் வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று 2025-26ம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கைகள் மீது நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு பண்ருட்டி தொகுதி உறுப்பினர் வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) பேசியதாவது: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்பது போல உங்களுடன் ஸ்டாலின் என்கிற அந்த திட்டத்தில் ஒரே இடத்தில் அனைத்து அதிகாரிகளையும் வரவழைத்து, பல்லாயிரக்கணக்கான மனுக்கள் வாங்கப்பட்டு, பல்வேறு கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அங்கே, இப்போது கலைஞருடைய பெயரில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், ரூ.1000, சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயன் பெறுகிறார்கள். ஆனால், உறுப்பினர் ஈஸ்வரன் கேள்வி கேட்கும் போது யார் விண்ணப்பத்திருக்கிறார்களோ, தகுதியுள்ளவர்களுக்கு, விடுபட்டவர்களுக்கு கண்டிப்பாக அரசு பரிசீலித்து வழங்கும் என்று தெரிவித்தீர்கள். இதுவரையிலும் அதற்கான அறிவிப்பு வழங்கப்படவில்லை. அது எப்போது வழங்குவீர்கள். உடனடியாக அதையும் வழங்குவதற்கு ஆவண செய்ய வேண்டும்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்த்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் ஒரு கோடியே 14 லட்சம் மகளிருக்கு இந்த உரிமைத்தொகையை முதல்வர் வழங்கி வருகிறார். இதுவரை கிட்டத்தட்ட ரூ.30 ஆயிரம் கோடி உரிமைத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. இ்த்திட்டத்தில், கூடுதலான மகளிர் பயனடைய வேண்டுமென்ற அடிப்படையில் முதல்வர் சில விதிகளை தளர்த்திக் கொடுத்திருக்கிறார்கள். உதாரணமாக, அரசு மானியத்தில், 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்கள், ஓஏபி பெறும் குடும்பங்கள் ஆகியவற்றில், விதிகளைப் பூர்த்தி செய்யும் மகளிருக்கும் உரிமைத் தொகை சேர்த்து வழங்கப்படும் என்று முதல்வர் அவையில் அறிவித்தார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 28 லட்சம் மகளிர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். இதற்கிடையே, புதிதாக உரிமைத் தொகை கோரி பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் வருவாய்த் துறைமூலம் கள ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் 2025 நவம்பர் 30ம்தேதிக்குள் முடிவடையும் என்று கூறிக்கொள்கிறேன். முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியான மகளிருக்கு வரும் டிசம்பர் மாதம் 15ம்தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் முடிவெடுத்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.