Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுப்ரீம் கோர்ட் ரத்து செய்த நிலையில் தேர்தல் நிதிப் பத்திரத்திற்கு புதிய சட்டமா?: ஒன்றிய அமைச்சர் பதில்

புதுடெல்லி: தேர்தல் நிதிப் பத்திரத் திட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, அதற்கென புதிய சட்டத்தை இயற்றும் எண்ணமில்லை என ஒன்றிய அரசு தெரிவித்தது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘தேர்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம், அரசமைப்பை மீறுவதாக உள்ளதால், அத்திட்டம் ரத்து செய்யப்படுகிறது. தேர்தல் நிதிப்பத்திரங்களை வாங்கியது யார்?, அந்தப் பத்திரங்களின் மூலம் எந்தெந்தக் கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றன ஆகிய விவரங்களை, தேர்தல் நிதிப் பத்திரங்களை விநியோகித்து வந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதனை தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் வெளியிட வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

அதன்படி, தேர்தல் நிதிப் பத்திரங்களால் ஆதாயமடைந்த கட்சிகளின் விபரங்கள் வெளியாகின. அதேபோல் இந்தத் திட்டம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய 2 மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மக்களவை தேர்தலுக்கு பிறகு இந்த தீர்ப்பு வந்ததால், மீண்டும் தேர்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வருமா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. இதையடுத்து, இந்த திட்டத்துக்கு மாற்றாக வேறு முன்னெடுப்புகளை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தவுள்ளதா? என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அளித்த எழுத்துபூர்வ பதிலில், ‘தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பாக புதிய சட்டங்கள் இயற்றும் எண்ணம் அரசிடம் இல்லை’ என்றார்.