Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

கடும் எதிர்ப்பை மீறி அமல்: புதிய தொழிலாளர் சட்டங்கள்; நல்லதா கெட்டதா? ஒன்றிய அரசுக்கு தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு

புதுடெல்லி: தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பை மீறி நாடு முழுவதும் 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் நேற்று முன்தினம் அமல்படுத்தப்பட்டுள்ளன. 29 பழைய சட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு சில மாற்றங்களுடன் இந்த 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

இதன் சாதக, பாதகங்கள் இதோ: சாதகங்கள்

* அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா துறைகளில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் ஒரு சட்டப்பூர்வ உரிமையாக மாற்றப்பட்டுள்ளது. முந்தைய சட்டங்களில், குறைந்தபட்ச ஊதியம் என்பது அமைப்புசார் நிறுவனங்களில் கூட 30% தொழிலாளர்களை மட்டுமே உள்ளடக்கியதாக இருந்தது.

* குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் ஒன்றிய அரசே அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்கும். அதற்கு குறைவாக எந்த மாநிலமும் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க முடியாது.

* ஆட்சேர்ப்பு, ஊதியம் அல்லது வேலை செய்வதற்கான வசதிகள் எதிலும் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது. திருநங்கைகள் என்பதற்காக வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது.

* எந்தவொரு கூடுதல் நேர வேலைக்கு 2 மடங்கு ஊதியம் வழங்க வேண்டும்.

* ஒப்பந்த மற்றும் குறிப்பிட்ட கால பணிக்கான ஊழியர்களுக்கும் நிரந்தர பணியாளர்களுக்கான சமமான ஊதியம், சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

* பணிக்கொடை பெறுவதற்கான கால வரம்பு 5 வருடமாக இருந்த நிலையில் ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட கால பணிக்கான ஊழியர்களும் ஓராண்டு பணியாற்றிய பிறகு பணிக்கொடை பெற தகுதியுடையவர்கள் ஆவர்.

* இஎஸ்ஐ (தொழிலாளர்களுக்கான மாநில காப்பீடு) நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

* ஊதியம் என்பது அடிப்படை சம்பளம், அகவிலைப்படி மற்றும் தக்கவைப்பு அலவன்ஸ் ஆகியவற்றை கொண்டதாக இருக்க வேண்டும். அடிப்படை சம்பளம், அகவிலைப்படி சம்பளத்தில் 50 சதவீதமாக இருக்க வேண்டும். இந்த மாற்றத்தின் மூலம் பணிக்கொடையாக கிடைக்கும் தொகை அதிகரிக்கும்.

* வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த அனைத்து தொழிலாளர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட வேண்டும்.

பாதகங்கள்

* உணவு டெலிவரி ஊழியர்கள் உள்ளிட்ட ஜிக் ஊழியர்கள் மற்றும் ஆன்லைன் டெலிவலி ஊழியர்களுக்கும் சமூக பாதுகாப்பு பலன்கள் வழங்கப்பட வேண்டும் என புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான தெளிவான வரைமுறைகள் இல்லை.

* பெண்கள் சுரங்கம் கனரக தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் இரவுப் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எந்த கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை.

* தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் குறைந்தபட்ச இருப்பு தொகை 40 முதல் 70 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்கால தேவைக்கான இந்த பணத்தை முன்கூட்டியே எடுத்து செலவழிப்பதால் பலரின் ஓய்வு கால வாழ்க்கை கேள்விக்குறியாகும்.

* பணி பாதுகாப்பை உறுதி செய்ய 300க்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ள நிறுவனங்கள் மட்டுமே ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்க முடியும் என புதிய சட்டத்தில் மாற்றப்பட்டுள்ளது. முன்பு இது 100 ஊழியர்களாக இருந்தது. மாநில அரசுகள் விரும்பினால் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கலாம். இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிக பணியாளர் செலவுகளை தாங்க முடியாமல் மேலும் நிலைமையை மோசமாக்கும் என நிபுணர்கள் கூறி உள்ளனர்.

* வேலைநிறுத்தத்திற்கான அறிவிப்பு 14 நாட்கள் முன்கூட்டியே வழங்க வேணடும். 75 சதவீத தொழிலாளர்கள் ஒப்புதல் இருந்தால் மட்டுமே சட்டப்பூர்வமாக வேலை நிறுத்தம் அங்கீகரிக்கப்படும் என்ற அறிவிப்புகள் தொழிற்சங்களை நீர்த்துப் போகச் செய்யும்.

* ஒரே நேரத்தில் அதிகமான தொழிலாளர்கள் சாதாரண விடுப்பு எடுப்பது அறிவிக்கப்படாத வேலைநிறுத்தமாக கருதப்படும் என்பது தொழிலாளர்களுக்கு விரோதமாக அமைந்துள்ளது.

* காங்கிரஸ் கேள்வி

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று விடுத்த அறிக்கையில், ‘‘ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு புதியதென 4 சட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிகள் கூட இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அவற்றில் சில புரட்சிகர சீர்திருத்தங்களாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த புதிய சட்டங்கள் காங்கிரசின் தொழிலாளர் நியாயத்திற்கான 5 அத்தியாவசிய கோரிக்கைகளையாவது உறுதி செய்யுமா? 100 நாள் வேலை உறுதி திட்டம் உட்பட அனைத்து பணிகளுக்கும் ஒருநாள் குறைந்தபட்ச ஊதியம் ரூ.400, ரூ.25 லட்சத்திற்கு சுகாதார காப்பீட்டை வழங்க சுகாதார உரிமைச் சட்டம். நகர்ப்புறங்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு உட்பட அனைத்து விரிவான சமூகப் பாதுகாப்பு, அரசு பணிகளில் ஒப்பந்த வேலைகளை நிறுத்துவதற்கான உறுதிப்பாடு ஆகியவற்றை 4 புதிய சட்டங்கள் உறுதி செய்யுமா?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.