Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வகுப்பறை நேரத்தை 434 மணி நேரத்தில் இருந்து 400ஆக குறைத்தது: மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க சென்னை ஐஐடியின் புதிய முயற்சி

சென்னை: மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வகுப்பறை நேரத்தை 434 மணி நேரத்தில் இருந்து 400ஆக சென்னை ஐஐடி குறைத்துள்ளது. இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் மிகவும் பிரபலமானவை ஐஐடிக்கள். இங்கு படித்து வெளியேறும் மாணவர்களுக்கு சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்களில் கை நிறைய சம்பளம் வாங்கும் வேலைகள் வழங்கப்படுகின்றன. ஓராண்டில் கோடிகளில் சம்பளம் வாங்கும் வேலை கிடைத்ததாக செய்திகளில் பார்த்திருக்கிறோம்.

அதேசமயம் ஐஐடிக்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கின்றன. இதில் சென்னை ஐஐடியும் அடங்கும். ஐஐடிகளில் படிக்கும் 12 ஆயிரம் மாணவர்களில் 2 சதவீதம் பேர் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதற்கு படிப்பு மட்டுமின்றி ஐஐடிக்களுக்கு உள்ளே இருக்கும் இறுக்கமான சூழலும், பாரபட்சமான செயல்பாடுகளும் காரணம் என்கின்றனர்.

இந்நிலையில் படிப்பில் இருக்கும் சிக்கல்களை களைய நிர்வாகம் சில புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது, வகுப்பறையில் அமரும் கல்வி நேரம் 434 மணி நேரத்தில் இருந்து 400ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செமஸ்டரிலும் கூடுதலான ஒர்க்‌ஷாப்களை நடத்தவும், அவற்றில் மாணவர்களை பங்கேற்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதலாமாண்டு மாணவர்களுக்கு விரைவாகவே கல்வியாண்டு முடிந்து 4 வாரங்கள் கூடுதல் விடுமுறை கிடைக்கும். வழக்கமாக ஒன்றரை மாதங்கள் விடுமுறை கிடைத்து வந்த நிலையில், இனிமேல் இரண்டரை மாதங்கள் விடுமுறை கிடைக்கும். இந்த விடுமுறை காலத்தில் புதிய கோர்ஸ்களை படிக்க ஆர்வம் காட்ட வேண்டும்.

அதாவது விளையாட்டு, நடனம், டிராமா மற்றும் கல்வி சார் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். ஒரே சமயத்தில் இரண்டு அல்லது மூன்று ஆக்டிவிட்டிகளிலும் மாணவர்கள் ஈடுபட முடியும். மேலும் தங்களது படிப்பை விரைவாக முடித்து விட்டு வேறு துறை சார்ந்த வேலையில் ஈடுபட விரும்பினால் அதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இது பி.டெக் மாணவர்களுக்கு பொருந்தும்.அதுமட்டுமின்றி பி.டெக் இரண்டாமாண்டு படித்து கொண்டிருக்கும் போது தொழில் முனைவோர் படிப்பை படிக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். 6வது செமஸ்டர் முழுவதும் இண்டர்ஷிப் செய்யும் வகையில் இருக்கும். தங்களது 40 சதவீத கிரெடிட்களை தேர்வு செய்யப்பட்ட கோர்ஸ்களில் இருந்து பெறும் வகையில் மாணவர்கள் மாற்றி கொள்ள முடியும்.