புதுடெல்லி: வருமான வரி மசோதா கடந்த 1961ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு பதில் ஒன்றிய அரசு கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தது. இதற்கிடையே இந்த மசோதாவை திரும்பப் பெறுவதாக நேற்று ஒன்றிய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பா.ஜ எம்பி பைஜெயந்த் பாண்டா தலைமையிலான தேர்வுக் குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்திருந்த நிலையில், அந்த பரிந்துரைகளைக் கொண்டு புதிய திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவை ஒன்றிய அரசு தயார் செய்துள்ளது. இந்த புதிய திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவை நாளை மறுதினம் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டமிட்டுள்ளது.
நேற்று நாடாளுமன்றத்தில் பிற்பகல் 3 மணிக்கு அவை கூடியதும், சபைத் தலைவராக இருந்த கிருஷ்ண பிரசாத் தென்னதியிடம் வருமான வரி மசோதாவை வாபஸ் பெற நிர்மலா சீதாராமன் அனுமதி கேட்டு, அந்த மசோதாவை வாபஸ் பெற்றார். புதிய சட்டத்தில் மத மற்றும் தொண்டு அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும் அநாமதேய நன்கொடைகளுக்கு தொடர்ந்து வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும், வரி செலுத்துவோர் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டிய தேதிக்குப் பிறகும் எந்த அபராதக் கட்டணமும் செலுத்தாமல் டிடிஎஸ் பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. புதிய மசோதாவில், மத அறக்கட்டளைகளால் பெறப்படும் நன்கொடைகளுக்கு வரி விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்துவது போன்ற பிற தொண்டு செயல்பாடுகளையும் கொண்ட மத அறக்கட்டளையால் பெறப்படும் நன்கொடைகளுக்கு, புதிய மசோதாவின் படி வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.