ஆந்திராவில் கலப்படத்துக்கு முற்றுப்புள்ளி போலி மதுபானங்களை கண்டறிய விரைவில் புதிய செயலி அறிமுகம்: கியூஆர் கோடு ஸ்கேன் செய்து தகவல்களை அறியலாம்
திருமலை: ஆந்திர மாநிலத்தில் சமீபகாலமாக கலப்பட மதுபான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மூலக்கலச்செருவு போலி மதுபான விவகாரம் ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வார்த்தைப் போருக்கு வழிவகுத்துள்ளது. போலி மதுபான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியான தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் ஜனார்தன் ராவை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும், இப்பிரச்னையை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனக்கு சாதகமாக மாற்றி வருகிறது.
கூட்டணி அரசாங்கத்தில் போலி மதுபானம் விற்கப்படுவதாகவும், ஒவ்வொரு தொகுதியிலும் கூட்டணித் தலைவர்களின் கண்களுக்கு முன்பாக போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாகவும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனால் போலி மதுபான விவகாரம், கூட்டணி ஆட்சியாளர்களிடையே சற்று பிரச்னையாக மாறியுள்ளது. எதிர்கட்சி குற்றச்சாட்டை தடுக்க முதல்வர் சந்திரபாபு ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளார். போலி மதுபான விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு, வரும் காலத்தில் போலி மதுபானத்தை சரிபார்க்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, ஒரு புதிய செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நுகர்வோரின் பாதுகாப்பை மனதில் கொண்டு, முதல்வர் சந்திரபாபுவின் உத்தரவின்படி ஏ.பி.டி.எஸ் என்ற சிறப்பு செயலியை கொண்டு வர அதிகாரிகள் தயாராக உள்ளனர். போலி மதுபானங்களை அடையாளம் காண விரைவில் ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டு மதுபாட்டிலில் உள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் மதுபான உற்பத்தி தொடர்பான அனைத்து விவரங்களும் தெரியவரும் என்று சந்திரபாபு நாயுடு தெளிவுப்படுத்தியுள்ளார். இதுகுறித்து கலால் துறை அமைச்சர் கொல்லு ரவீந்திரா கூறுகையில், ‘சிறப்பு மொபைல் செயலியை பயன்படுத்தி மது பாட்டிலில் உள்ள லேபிளை ஸ்கேன் செய்வதன் மூலம், அதன் முழு விவரங்களையும் அறிய முடியும். மதுபானம் எப்போது தயாரிக்கப்பட்டது, அதன் தர நிலைகள் என்ன? காலாவதி தேதி? போன்ற அனைத்து முக்கிய தகவல்களும் சில நொடிகளில் அறிந்து கொள்ளலாம். இதனால், போலி மதுபானங்கடளை தடுக்க முடியும், என்றார்.