புதிய அனல் மின் நிலையம் திறக்கும் முன்பு சாம்பல் கிணறு கட்டமைப்பு பணியை தொடங்க வேண்டும்: வடசென்னை மக்கள் கோரிக்கை
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான 2 அனல் மின் நிலையங்கள் வடசென்னையில் இயங்கி வருகின்றன. நாளொன்றுக்கு 5479.45 டன் நிலக்கரியை எரித்து, 17 கோடி லிட்டர் கடல் நீரை உறிஞ்சி, 660 மெகாவாட் மின்சாரம் வடசென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும். இந்த செயல்பாட்டின்போது, 1972 டன் சாம்பல் கழிவு உற்பத்தியாகும். ஏற்கனவே எண்ணூரில் 3300 மெகாவாட் அளவிலான 2 அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 2 அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேற்றும் சாம்பலானது சாம்பல் கிணறுகளில் சேமிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த சாம்பல் வெளியேறுவதை தாங்கிக் கொள்ளும் அளவுகளுக்கு போதுமான கிணறாக இல்லை.
இந்த நிலையில் புதிதாக வரவிருக்கும் வடசென்னை அனல் மின் நிலையம் 3 மற்றும் எண்ணூர் எஸ்இசட் எஸ்டிபிபிகளின் மூலம் வெளியேற்றப்படும் சாம்பலை சேமிக்கவோ, பாதுகாக்கவோ, புனரமைக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த 2 வெப்ப நிலையங்களின் சாம்பலானது கூடுதல் சாம்பலாகவே ஏற்கனவே முழுமையடைந்து நிற்கும் வடசென்னை அனல் மின் நிலையங்களின் உள்ள கிணறுகளிலேயே கூடுதலாக சேமிக்கவோ, நிரப்பவோ வேண்டி வரும். ஆனால் தற்போதே சாம்பல் கிணறு நிரம்பி உள்ளதால் மேற்கொண்டு அதில் எப்படி சாம்பலை நிரப்ப முடியும், என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புள்ளனர்.
இதனால், புதிதாக வரவிருக்கும் அனல் மின் நிலையங்களின் சாம்பலை சேமிக்க முடியாததால் சுற்றுச்சூழல் மாசு மற்றும் சீர்கேடு ஏற்பட்டு மக்களின் நலன் பாதிக்கப்படும். அத்தோடு இல்லாமல் மக்களின் மத்தியில் எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கும். எனவே, புதிதாக வரவிருக்கும் அனல் மின் நிலையங்கள் உற்பத்தி தொடங்குவதற்கு முன்பு சாம்பல் கிணறை கட்டமைப்பது அவசியம் கருதி கட்டுமான பணியை உடனடியாக தொடங்கப்பட வேண்டும் வடசென்னை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
