Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

ஊட்டி: நெரிசலை குறைக்கும் வகையில் குன்னூர் செல்லாமல், காட்டேரி - மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு புதிய பாதை அமைக்கும் பணி 95 சதவீதம் முடிந்துள்ளது. விரைவில் இந்த சாலை பயன்பாட்டுக்கு வரும் என்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரம் முதல் தென்மேற்கு பருவமழை துவங்கும். இதில், ஆங்காங்கே மரங்கள் விழுவது, பாறைகள் உருண்டு விழுவது, மண் சரிவுகள் போன்றவைகளும் ஏற்படும்.

இதனால் ஊட்டிக்கு குன்னூர் வழியாக செல்லும் பாதையில் கடும் நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் கடும் அவதியடைகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில், குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில், காட்டேரி சந்திப்பு பகுதியில் இருந்து மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு ரூ.46 கோடி மதிப்பீட்டில் மாற்று சாலை அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது, ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் கொல்லிமலை சாலை சந்திப்பு பகுதி முதல் கொல்லிமலை வரையில் சாலை அகலப்படுத்தும் பணிகள், கொண்டை ஊசி வளைவு அமைக்கும் பணிகள் மற்றும் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாற்று சாலை அமைக்கும் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஓரிரு நாட்களில் பணிகள் முடிந்து விரைவில் வாகன போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சாலை திறக்கப்பட்டால், மேட்டுப்பாளையம் மற்றும் கோவை போன்ற சமவெளிப்பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் குன்னூர் மற்றும் ஊட்டி நகருக்குள் வராமல் கூடலூர், மைசூர் மற்றும் கேரள மாநிலங்களுக்கு எளிதாக செல்ல முடியும். இதனால், ஊட்டி-குன்னூர் சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பகுதியில் இருந்து சேலாஸ், கெந்தளா, பாலாடா, கொல்லிமலை வழியாக ஊட்டி-மஞ்சூர் சாலையில் காந்திப்பேட்டை பகுதி வரை 20.5 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இச்சாலையில் 138 சிறிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த 3.75 மீட்டர் அகலம் இருந்த சாலை தற்போது 7 மீட்டர் சாலையாக அகலப்படுத்தப்பட்டு இரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

இச்சாலை திறப்பதன் மூலம் குன்னூர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்க முடியும். அதேபோல், விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள காய்கறிகளை நகர் பகுதிகளுக்குள் வராமல், லாரிகள் மூலம் இச்சாலையில் கொண்டு செல்லலாம். இதேபோல், கூடலூர், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் ஊட்டி, குன்னூர் போன்ற நகர் பகுதிகளுக்குள் வராமல், எளிதாக புறநகர் வழியாக செல்லலாம்.

95 சதவீதம் சாலை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தென்மேற்கு பருவமழை துவங்கும் முன் இச்சாலை சீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றனர். இச்சாலை சீரமைப்பு பணிகள் முடிந்தால், கனரக வாகனங்கள் மட்டுமின்றி, சீசன் சமயங்களில் சிறிய வாகனங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து சமவளெிப்பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் நெரிசலில் சிக்காமல் செல்வது மட்டுமின்றி, நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும் என்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.