வாரம் இறுதி நாளில் இரண்டு முறை அதிரடியாக உயர்வு பவுன் ரூ.92 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சம்: வெள்ளியும் போட்டி போட்டு எகிறியது; தீபாவளிக்கு நகை வாங்க காத்திருப்போர் கடும் அதிர்ச்சி
சென்னை: தங்கம் விலை வாரம் இறுதி நாளான நேற்று இரண்டு முறை அதிரடியாக உயர்ந்து பவுன் ரூ.92 ஆயிரத்தை தொட்டு புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது. வெள்ளியும் போட்டி போட்டு உயர்ந்து புதிய உச்சம் கண்டது. இந்த அதிரடி விலை ஏற்றம் தீபாவளி பண்டிகைக்கு நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம், வெள்ளி விலை கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்த மாதமும் விலை உயர்வு என்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதுவும் கடந்த ஒரு வாரமாக தினமும் காலை மற்றும் பிற்பகல் என ஒரே நாளில் இரண்டு முறை மாற்றம் ஏற்பட்டு, தங்கம்-வெள்ளி விலை உயர்ந்து வருகிறது. இதனால், தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்து வருகிறது. அதுவும் பவுன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு, நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று குறைந்தது. நேற்று முன்தினம் காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.165ம், பவுனுக்கு ரூ.1,320ம் குறைந்து ஒரு பவுன் ரூ.90,080க்கு விற்பனையானது. இந்த மகிழ்ச்சியை நகை வாங்குவோர் அனுபவிப்பதற்குள் பிற்பகலில் தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. பிற்பகலில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80, பவுனுக்கு ரூ.640ம் அதிகரித்து ஒரு பவுன் ரூ.90720க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் வாரம் இறுதி நாளான நேற்று காலையில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது.
நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,425க்கும், பவுனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.91,400க்கும் விற்பனையானது. அதே போல நேற்று காலையில் வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்ததை பார்க்க முடிந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.187க்கும், கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்த அதிரடி விலை ஏற்றத்தை தாங்கி கொள்வதற்குள், மாலையில் தங்கம் விலை இரண்டாவது முறையாக அதிரடியாக உயர்ந்தது. நேற்று மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,500க்கும், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.92 ஆயிரத்தை தொட்டது. இந்த விலை இதற்கு முன்பிருந்த அனைத்து விலையையும் முறியடித்து புதிய வரலாற்று உச்சத்தை கடந்தது.
அதே நேரத்தில் நேற்று காலை, மாலை என 2 வேளைகளில் பவுனுக்கு ரூ.1280 உயர்ந்துள்ளது. இதே போல மாலையில் வெள்ளி விலையும் உயர்வை தான் சந்தித்தது. மாலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ஒரு கிராம் ரூ.190க்கும், கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி 1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனையானது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில் தங்கம், வெள்ளி விலை போட்டு போட்டு உயர்ந்து வருவது விஷேசத்திற்காக நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் தான் வழக்கமாக உயர்ந்து வரும். ஆனால், தற்போது தங்கத்திற்கு இணையாக போட்டி போட்டு வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக, வெள்ளியின் மீதான முதலீடு தான் காரணம் என்று கூறப்படுகிறது.