அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு தொண்டர்கள் உரிமை கழகமாக மாற்றம் டிச.15ல் முக்கிய முடிவு எடுக்கப்படும்: புதுக்கட்சி திட்டம் குறித்து கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
சென்னை: அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு இனி அதிமுக தொண்டர்கள் உரிமை கழகமாக மாறியுள்ளது. மேலும் வரும் டிசம்பர் 15ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று புதுக்கட்சி தொடங்கும் திட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உட்பட முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து தங்களை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டு கடந்த மூன்றரை ஆண்டுகளாக அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று புரட்சி நடத்தி வந்தார். அதில் எந்தவிதமான முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் உரிமைமீட்புக் குழுவின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் முன்னதாக வைத்திலிங்கம் பேசுகையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவானது, இனி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்கழகமாக செயல்படும். வரும் சட்டமன்ற தேர்தலில் இறுதி முடிவு எடுக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 15ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். ஒரு மாதத்தில் இணைப்பு நடக்காவிட்டால் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய கட்சி உருவாக்கப்படும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு, அதிமுக தொண்டர்கள் உரிமை கழகமாக மாறியுள்ளது. வரும் டிசம்பர் 15ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி முக்கிய முடி எடுக்க உள்ளேன். டிசம்பர் 15ம் தேதிக்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்.
சில சர்வாதிகாரிகளால் நம்முடைய இயக்கம் கடந்த 11 தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருகிறது. தொடர் தோல்விகளால் நாம் கண்ணீர் விட்டு அழும் நிலையில் அதிமுக உள்ளது.அதனால் அதிமுக மீது தொண்டர்கள், மக்கள் வைத்திருந்த நம்பிக்கையையும் எடப்பாடி பழனிச்சாமியும், அதிமுகவும் இழந்து விட்டது. தவறான நடைமுறை, தவறான பொதுக்குழு, தவறான பாதையில் தோல்வியை சந்தித்து வருகிறது. கழகம் ஒருங்கிணைய வேண்டும், இல்லாவிடில் எங்களின் முடிவை மக்கள் ஏற்கும் நிலைக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள். 3 ஆண்டுகளாக கொடுத்த ஆதரவு, தியாக உணர்வு செயல்பாடுகளுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தொடர் தோல்விகளால் நாம் கண்ணீர் விட்டு அழும் நிலையில் அதிமுக உள்ளது.அதனால் அதிமுக மீது தொண்டர்கள், மக்கள் வைத்திருந்த நம்பிக்கையையும் எடப்பாடி பழனிச்சாமியும், அதிமுகவும் இழந்து விட்டது.



