சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமை செயலகத்தில், ஐக்கிய அமீரகத்தின் வர்த்தகத் துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல்மரி சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில் புத்தொழில்கள், தொழில் சூழலை மேம்படுத்துதல், விவசாயம், உணவு பதப்படுத்துதல், மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள், பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இணைந்து பணியாற்றி முதலீடுகள் மேற்கொள்வதன் மூலம் தமிழகத்துக்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இந்த சந்திப்பின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதல்வரின் செயலாளர் முருகானந்தம், ஐக்கிய அமீரக தூதரகத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Advertisement