பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே, அதிக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமையப்பெற்ற மாநிலங்களில், லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவுகளுடன் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது. எதிர்வரும் 2025-26ம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் 10 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 25 லட்சம் கோடி வங்கிக் கடன் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள குறு, சிறுமற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில்,
இந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம், விழுப்புரம் மாவட்டம் சாரம் மற்றும் நாயனுர், கரூர் மாவட்டம் நாகம்பள்ளி, திருச்சி மாவட்டம் -சூரியூர், மதுரை மாவட்டம் கருத்தபுளியம்பட்டி, இராமநாதபுரம் மாவட்டம் தனிச்சியம், தஞ்சாவூர் மாவட்டம் நடுவூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டம்-நரசிங்கநல்லூர் ஆகிய 9 இடங்களில் மொத்தம் 398 ஏக்கர் பரப்பளவில் ரூ. 366 கோடி மொத்த திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டைகள் தமிழ்நாடு சிறுதொழில் முன்னேற்றக் கழகத்தால் (சிட்கோ) உருவாக்கப்படும். இதன் மூலம் சுமார் 17,500 நபர்கள் வேலை வாய்ப்பினைப் பெறுவர்.