Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘சைபர்’ மோசடியில் இருந்து பணத்தை காக்க ‘வாட்ஸ்அப், பேஸ்புக்’கில் புதிய அம்சங்கள்

புதுடெல்லி: சைபர் மோசடியில் இருந்து பணத்தை காக்க ‘மெட்டா’ நிறுவனம் தங்களின், ‘வாட்ஸ்அப், பேஸ்புக்’ தளங்களில், புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றைய உலகில் சமூக வலைதளங்கள் மிக பெரிய பிரதிபலிப்பாக உள்ளது. அந்த வகையில் தற்போது சமூக வலைதங்களில், பகுதி நேர வேலை, சலுகை விலையில் பொருட்கள், முதலீட்டு வாய்ப்புகள், ‘டிஜிட்டல்’ கைது என, பல வழிகளில் பொதுமக்களை மோசடி செய்து பணம் பறிக்கும் செயல்கள் நடந்து வருகின்றன. கடந்தாண்டு மட்டும் சைபர் மோசடிகளில் சிக்கி இந்தியர்கள், ரூ. 22,800 கோடிக்கு மேல் இழந்துள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதே போல், இந்தாண்டு ஜனவரி முதல் மே வரை, ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் பொது மக்கள் இழந்துள்ளதாக கூறியுள்ளது. பெரும்பாலும், ‘வாட்ஸாப், பேஸ்புக்’ தளங்கள் மூலம்தான் இந்த மோசடிகள் நடக்கின்றன. இந்நிலையில், இந்த செயலிகளில் புதிய மோசடி தடுப்புக்கான பாதுகாப்பு அம்சங்களையும் விழிப்புணர்வு முயற்சிகளையும் அதன் தாய் நிறுவனமான, ‘மெட்டா’ அறிமுகப்படுத்தியுள்ளது. ‘வாட்ஸ்அப்’பில் அறிமுகம் இல்லாத நபர்களுடன், ‘வீடியோ’ அழைப்பில் பேசும்போது, ‘மொபைல் போன்’ திரையை பகிரும் பயனர்களுக்கு இனி எச்சரிக்கை செய்தி காட்டப்படும்.

இது இணைய மோசடி கும்பல் வங்கி விவரங்கள் அல்லது ஓடிபி எண்களை திருட பயன்படுத்தும் வழிமுறை. ‘பேஸ்புக் மெசெஞ்சரில்’ செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மோசடியை கண்டறியும் அமைப்பு அறிமுகமாக உள்ளது. புதிய தொடர்பில் இருந்து வரும் குறுந்தகவல்கள் குறித்து பயனர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்படும். மேலும், மூத்த குடிமக்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வை தீவிரப்படுத்தும் நோக்கில், நாட்டின் முக்கிய நகரங்களில் பயிற்சி முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம் சைபர் மோசடியில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது.