இன்ஸ்டாகிராம் யூசர்களுக்கு பிளாட்ஃபார்ம் தற்போது ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இனி யூசர்கள் தங்களுடைய ரீல்களின் வாட்ச் ஹிஸ்டரியை (Watch History) பார்ப்பதற்கான அனுமதியை பெறுகின்றனர். இதனையடுத்து, யூசர்கள் தவறுதலாக ஸ்வைப் செய்தாலோ அல்லது அப்ளிகேஷன் ரெஃப்ரெஷ் ஆகும்போது நீங்கள் பார்த்த ரீல்கள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்துகொள்வதற்கு இது உதவியாக இருக்கும். அதேபோல், புதிய ரீல்கள் முதல் பழைய ரீல்கள் வரை அல்லது பழைய ரீல்கள் முதல் புதிய ரீல்கள் வரையிலான ஒரு அட்டவணையை இந்த அம்சம் உங்களுக்கு காண்பிக்கும். மேலும், ஒரு குறிப்பிட்ட தேதி அல்லது ஒரு தேதியில் இருந்து மற்றொரு தேதி வரையிலான வாட்ச் ஹிஸ்டரியைகூட இந்த அம்சத்தை பயன்படுத்தி உங்களால் பார்க்க முடியும். அடுத்தபடியாக, வாட்ச் ஹிஸ்டரியில் நீங்கள் பார்த்து ரசித்த ரீல்களை நீக்குவதற்கான அனுமதியும் யூஸர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதற்கு இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனில் உள்ள செட்டிங்ஸ் (Settings) ஆப்ஷனுக்கு சென்று, அதில் யுவர் ஆக்டிவிட்டி (Your activity) என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு, அதில் வாட்ச் ஹிஸ்டரி (Watch History) என்கிற ஆப்ஷனை காண்பீர்கள். இன்ஸ்டாகிராமிற்கு கடும் போட்டியாளராக நிலவும் டிக் டாக் பிளாட்ஃபார்மில் ஏற்கனவே இந்த அம்சம் பயன்பாட்டில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டிக் டாக் போலவே இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனிலும் இனி யூசர்கள் தாங்கள் பார்த்த ரீல்களின் வரலாற்றை தேதி வாரியாக, கடந்த வாரம் அல்லது கடந்த மாதம் அல்லது ஒரு தேதியில் இருந்து மற்றொரு தேதி வாரியாக தெரிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், கால வரிசையில் அல்லது கண்டன்டுகளை உருவாக்கும் ஆத்தர் வாரியாக வீடியோக்களை பிரித்து தெரிந்துகொள்ளலாம். இந்த அம்சம் டிக்டாக்கில் இதுவரை இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை.
தற்போது இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி உள்ள இந்த புதிய அம்சம் நீண்ட நாட்களாக பல யூசர்கள் கோரிக்கை விடுத்துவந்த ஒரு அம்சம் ஆகும். இதற்கு முன்பு இழந்த வீடியோக்களை ரெக்கவர் செய்வதற்கு யூசர்கள் அப்ளிகேஷனில் இருந்து தங்களுடைய டேட்டாவை டவுன்லோட் செய்து மற்றும் அதிலிருந்து தங்களுடைய வாட்ச் ஹிஸ்டரியை பெறுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இப்புதிய அம்சம் மூலமாக இழந்த வீடியோக்களை மீண்டும் கண்டுபிடிப்பதற்கான செயல்முறை எளிமையாக்கப்பட்டுள்ளது. அதோடு, டிக் டாக் உடன் ஒப்பிடும்போது இன்ஸ்டாகிராம் ரீல்களை பார்க்கும் அனுபவம் இதன் மூலமாக மேம்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.
டிக் டாக் போலவே செயல்படும் இன்ஸ்டாகிராம் ரீல்களில் அவ்வப்போது யூசர்களை மகிழ்விக்கும் வகையிலும், அவர்களுடைய அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கிலும் மெட்டா நிறுவனம் பல்வேறு விதமான அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் ஒரே சீரிஸில் பல்வேறு ரீல்களுடன் இணைப்பதற்கான அனுமதியை கிரியேட்டர்களுக்கு இன்ஸ்டாகிராம் வழங்கியது. மேலும், பிக்சர்-இன்-பிக்சர் (Picture-In-Picture) என்ற அம்சத்தையும் அறிமுகம் செய்தது. இந்த இரண்டு அம்சங்களும் ஏற்கனவே டிக் டாக்கில் உள்ளது.


