5 ஆயிரம் ஆண்டு தொன்மை வாய்ந்த கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றார் தேசப்பிதா மகாத்மா காந்தி. இந்த வகையில் ஜனநாயகத்தின் முதுகெலும்பாக இருப்பது உள்ளாட்சி அமைப்புகள். ஒன்றிய, மாநில அரசுகளை போல, உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பணிகளும் தொய்வின்றி தொடர வேண்டும் என்பதற்காக நடத்தப்படுபவை கிராமசபை கூட்டங்கள். உள்ளாட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்கவும், கேள்விகள் கேட்கவும், நிராகரிக்கவும், சரி படுத்தவும், தேவையானதை கேட்டுப்பெறவும் இந்த கிராம சபை கூட்டங்கள் வழிவகுக்கிறது. பஞ்சாயத்து ராஜ் என்னும் சட்டம் இதற்கான அதிகாரத்தை வழங்கியுள்ளது.
சிறிய அளவிலான சமூகத்தின் தேவைகளை தாங்களே தீர்மானித்து நிறைவேற்றிக் கொள்வதற்கு அதிகாரம் அளிக்கும் அமைப்பு முறையே கிராமசபைகள். கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் கிராமசபை கூட்டம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டு காந்தி ஜெயந்திக்கு நடக்கவிருந்த கிராமசபைக் கூட்டம், நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இது அக்டோபர் 11ம் தேதி நடக்கும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று தமிழக அரசு நடத்திய கிராம சபைக்கூட்டமும், அதில் முதல்வர் பங்கேற்ற விதமும் ஒட்டு மொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் 12,480 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நடந்தது. இத்தனை கிராமங்களையும் இணையவசதி மூலமாக இணைத்து, கூட்டம் நடத்தப்பட்டது. இதில் காணொலி வாயிலாக முதல்வர் பங்கேற்று பேசியது தான் பெரும் சிறப்பு. இந்திய மாநிலங்களில் திட்டங்களின் முன்னோடியாக திகழும் தமிழ்நிலம், கிராமசபை கூட்டத்திலும் புதிய அத்தியாயம் படைத்துள்ளது. தமிழகத்தின் பெரும் சிறப்பு வாய்ந்த திட்டங்கள், அதன் மூலம் கிடைக்கும் மக்களுக்கான பலன்கள், மாநிலத்தின் வளர்ச்சி இலக்கு என்று அனைத்தையும் புள்ளி விவரங்களுடன் பட்டியலிட்டு முதல்வர் பேசினார்.
மேலும் ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்களிடமும் கருத்துகளை கேட்டறிந்தார். அதோடு கிராமசபை கூட்டத்தில் பரிந்துரைக்கப்படும் தீர்மானங்கள் அனைத்தும் திட்டங்களாக நிறைவேற்றப்படும் என்ற உறுதியையும் மக்களுக்கு வழங்கினார். தமிழ்நாடு அரசு, நகரங்களுக்கு இணையான கட்டமைப்புகளையும், வசதிகளையும் கிராமங்களிலும் ஏற்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக இருப்பது விஞ்ஞானத்தின் வரப்பிரசாதமான இணையதளம். இந்த இணையத்தின் வசதியை குக்கிராமங்களிலும் உருவாக்கி தந்துள்ளது தமிழ்நாடு அரசு. சென்னையில் இருந்து முதல்வர் பேசியது அனைத்து ஊராட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பானது.
பைபர் ஆப்டிக் கேபிள் என்னும் இணையவசதி மூலம் இது சாத்தியமானது. இந்தவகையில் நேற்று நடந்த கிராமசபைக்கூட்டம் என்பது தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் தங்கு தடையற்ற இணையவசதி உள்ளது என்பதற்கு சாட்சியமாய் அமைந்தது.‘‘இந்தியாவின் வலிமை கிராமங்களில் தான் இருக்கிறது. இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது என்று நமது தேசத்தந்தை மகாத்மாகாந்தி ஆணித்தரமாக சொன்னார். அப்படிப்பட்ட கிராமங்கள் முன்னேற்ற வேண்டும். கிராம பொருளாதாரத்தை வலிமையாக்க வேண்டும். கிராம நிர்வாகங்கள் வலிமையாக இருக்க வேண்டும். இதை ஜனநாயகப்பூர்வமாக சிந்தித்து திட்டங்களை செயல்படுத்துகிறோம்’’ என்று முதல்வரின் உரையில் குறிப்பிட்ட வரிகள் அனைத்தும் உண்மையின் பெருமிதம் என்றால் அது மிகையல்ல.