புதிய அறிவிப்பு வெளியீடு உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்
சென்னை: உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம், புதிய அறிவிப்பை நேற்று வெளியிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அந்த அறிவிப்பை தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்துள்ளது. மேலும், அது தொடர்பாக தேர்வு வாரியத்தின் இணைய தளம் http://www.trb.tn.gov.in மூலம் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2708 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பாடவாரியான காலிப்பணியிட விவரங்கள், கல்வித்தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன மேலும், இணைய தளம் மூலம் இன்று முதல் நவம்பர் 11ம் தேதி வரை வின்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே, இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களும் தற்போது புதியதாக விண்ணப்பிக்க வேண்டும். இவர்களுக்கு மட்டும் இந்த புதிய விண்ணப்பத்துக்கான கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.