ஆக்லாந்து: பாலஸ்தீன விவகாரத்தில் நியூசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சரின் வீட்டில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடியாது என நியூசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டின் முன்பு சில போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், நேற்று ஆக்லாந்தில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் வீட்டில் இல்லை. ஆனால், அவரது மனைவி மற்றும் விருந்தினர் ஒருவர் இருந்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபர், அமைச்சரின் வீட்டு ஜன்னலை இரும்புக்கம்பியால் அடித்து நொறுக்கியதுடன், ‘உண்மையான உலகிற்கு வரவேற்கிறோம்’ என்ற வாசகம் அடங்கிய குறிப்பையும் வாசலில் விட்டுச் சென்றுள்ளார்.
இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, 29 வயது இளைஞர் ஒருவர் தாமாக முன்வந்து சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், துணைப் பிரதமர் டேவிட் சேமோர், எதிர்க்கட்சித் தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.