நியூயார்க்: நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோஹ்ரான் மம்தானி தனது வெற்றி உரையில் இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வரிகளை சுட்டிக்காட்டி பேசினார். அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய - அமெரிக்கரான ஸோரான் மம்தானி, குடியரசுக் கட்சியின் சார்பாக கர்டிஸ் ஸ்லிவா, முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர், நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மற்றும் இந்திய - அமெரிக்க மேயராகவும், தென்னாப்பிரிக்காவில் பிறந்து மேயரானவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் வெற்றி உரையை நிகழ்த்திய ஸோரான் மம்தானி; இந்த நொடிப்பொழுது வரலாற்றில் அரிதாக வாய்க்கும் ஒரு தருணம் இப்போது வந்துள்ளது. நாம் பழைய நிலையில் இருந்து புதிய சூழலுக்குள் காலடி எடுத்து வைக்கிறோம். நீண்ட காலமாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த ஒரு தேசத்தின் ஆன்மா, தன் குரலை வெளிப்படுத்தியுள்ளது என மம்தானி பேசினார். இது 1947ம் ஆண்டு இந்திய சுதந்திர அடைந்த நாளில் நேரு பேசிய வரலாற்று சிறப்புமிக்க உரையின் ஒரு பகுதியாகும்.
