Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்கா புதிய உத்தரவு; இந்தியர்களுக்கு பாதிப்பு

புதுடெல்லி: அமெரிக்க குடியேற்றமற்ற விசாக்களுக்கு இனிமேல் இந்தியர்கள் தங்களது சொந்த நாட்டில் மட்டுமே நேர்காணலுக்கு முன்பதிவு செய்ய முடியும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, இந்தியாவில் அமெரிக்க விசா நேர்காணலுக்கான காத்திருப்பு காலம் மூன்று ஆண்டுகள் வரை நீண்டது. இதனால், அவசரமாக அமெரிக்கா செல்ல வேண்டிய இந்தியர்கள், தாய்லாந்து, சிங்கப்பூர், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து, அங்குள்ள அமெரிக்கத் தூதரகங்களில் எளிதாக நேர்காணல் தேதியைப் பெற்று வந்தனர்.

குறிப்பாக, வர்த்தகம் மற்றும் சுற்றுலா விசாக்களுக்கு பாங்காக் மற்றும் பிராங்பேர்ட் நகரங்களும், தற்காலிகப் பணியாளர் விசாக்களுக்கு பிரேசில் மற்றும் தாய்லாந்து நகரங்களும் முக்கிய மையங்களாக விளங்கின. இந்த நடைமுறை, நீண்ட காத்திருப்பு காலத்தைத் தவிர்க்கப் பெரிதும் உதவியாக இருந்தது. இந்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் விசா விதிகளில் புதிய, கடுமையான மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. உடனடியாக அமலுக்கு வந்துள்ள இந்த புதிய உத்தரவின்படி, குடியேற்றமற்ற விசாக்களுக்கு விண்ணப்பிப்போர், இனி தங்களது சொந்த நாட்டில் அல்லது தாங்கள் சட்டப்பூர்வமாக வசிக்கும் நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில்தான் நேர்காணலுக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் சுற்றுலா மற்றும் வர்த்தக விசா நேர்காணலுக்கான காத்திருப்பு காலம் சென்னையில் ஒன்பது மாதங்கள் வரையிலும், பிற நகரங்களில் மூன்று முதல் ஐந்து மாதங்கள் வரையிலும் உள்ளது. இந்த புதிய விதிமுறையால், அவசரப் பயணம் மேற்கொள்ள வேண்டிய இந்தியர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மேலும், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 79 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் உட்பட அனைவருக்கும் நேரடி நேர்காணல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.