*குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
தஞ்சாவூர் : தஞ்சை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் இலக்கியா தலைமை வகித்தார். அப்போது, விவசாயிகள் பேசியதாவது; தஞ்சை மாவட்டத்தில் விளை நிலங்களை ரியல் எஸ்டேட் விற்பனைக்காக பிளாட் போடுவதை அனுமதிக்க கூடாது.
தஞ்சை மாவட்டத்தில் உரக்கடைகளில் உரம் வாங்கும்போது இணை உரங்களை வாங்க கூறி கட்டாயப்படுத்துகின்றனர். ஒரு மூட்டை யூரியா வாங்கினால் நுண்ணூட்டம் ஒரு மூட்டை வாங்க வேண்டும் என வற்புறுத்துவதால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவாகிறது.
இவ்வாறு நிபந்தனை விதிக்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் சாகுபடியை ஊக்குவிக்க புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்த வேண்டும். பழைய நெல் ரகங்களை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதால் மகசூல் குறைகிறது. எனவே நெல் ஆராய்ச்சி நிலையம் மூலம் புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை பெறுவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பயிர் காப்பீட்டு நிறுவன அலுவலகம் திறக்க வேண்டும். கடந்த டிசம்பர் மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடாக உள்ளது. தனியார் கடைகளில் யூரியா கேட்டால் காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் வாங்கினால் யூரியா கொடுப்போம் என்கின்றனர்.
கிராம கூட்டுறவு வங்கிகளில் மனுக்கள் அளிக்கப்பட்டு கடன் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. மருங்கை கூட்டுறவு சங்கத்தில் 40 மனுக்கள் தேங்கி கிடக்கிறது. துறையூர் கூட்டுறவு சங்க அலுவலகம் திறப்பதே இல்லை. கடன்களும் வழங்கப்படுவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினார். இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.