Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

புதிய சட்டங்களால் தொழிலாளர் நலன்கள், உரிமைகள் பாதிக்காத வகையில் ஒன்றிய அரசு தீர்வு காண வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: புதிய சட்டங்களால் தொழிலாளர் நலன்கள், உரிமைகள் பாதிக்காத வகையில் ஒன்றிய அரசு தீர்வு காண வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள 4 புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் (நவம்பர் 26) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். தேசத்தின் பொருளாதார, தொழில் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்துவதற்காக ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்கள் நீக்கப்பட்டு 4 புதிய சட்டங்களை கடந்த 22-ஆம் தேதி முதல் ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி ஊதிய சட்டம் 2019, தொழில் உறவு சட்டம் 2020, சமூக பாதுகாப்பு சட்டம் 2020, தொழிலக பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம், பணிச்சுழல் சட்டம் 2020 ஆகிய 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட 4 சட்டங்களும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் குறைந்தபட்ச ஊதியம், பாலின பாகுபாடு இல்லாமல் பெண்களுக்கும் சம ஊதியம், 40 கோடி தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு, ஊழியர்களுக்கு ஓராண்டுக்கு பின் பணிக்கொடை, வெளிப்படை தன்மையை மேம்படுத்த அனைத்து தொழிலாளர்களுக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கல், கூடுதல் நேர பணி செய்தலுக்கு இரு மடங்கு ஊதியம் என சமூகப் பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு, சுகாதாரம், பணி நிலைத்தல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் விதமான அம்சங்கள் இடம் பெற்றுள்ள இந்த சட்டங்கள் தொழில் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதுதான் என்ற போதிலும் தொழிலாளர்கள் நலன்களும், உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் உரிமைகள் குறித்த தொழிற்சங்கங்களின் ஐயப்பாடுகள் களையப்பட வேண்டும்.

இந்த புதிய சட்டம் ஏற்கனவே அமைப்புசார் தொழிலாளர்களுக்கு மட்டும் குறைந்தபட்ச ஊதியம் என்று இருந்ததை தற்போது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் என்பது உரிமையாக மாற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதுபோல் ஆள் சேர்ப்பு மற்றும் ஊதியம் அல்லது வேலை செய்வதற்கான வசதிகள் எதிலும் ஆண், பெண் பாலின அடிப்படையில் பாகுபாடுகள் காட்டக்கூடாது. திருநங்கைகளுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது என்பது வரவேற்கத்தக்கது என்ற போதிலும் சுரங்கம், கனரக தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் பெண்களுக்கு இரவு பணி என்பது குடும்ப கவனிப்பு மற்றும் பெண்களின் பாதுகாப்பு என்ற வகையில் மறு ஆய்வு செய்யப்பட வேண்டியதாகும்.

மேலும், இந்த சட்டங்கள் மூலம் பணி நீக்கம் அதிகரிக்கும் என்றும், தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை 9 மணி முதல் 12 மணி நேரமாகவும், கடைகள் மற்றும் நிறுவனங்களில் 9 முதல் 10 மணி நேரம் அதிகரித்திருப்பது தொழிலாளர்கள் உரிமைகளுக்கும், நலன்களுக்கும் முரணானது. அதேசமயம் தொழில் நிறுவனங்களுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுபோல் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக நிறுவனங்களிடம் கோரிக்கை வைக்கலாம். ஆனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது, தொழிற்சங்கங்கள் அமைக்கக் கூடாது போன்றவைகள் மூலம் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த சட்டத்தில் உள்ள குறைபாடுகள் தொழில் வளர்ச்சியை பாதிக்காத வகையிலும், தொழிலாளர் நலன்களை பாதுகாக்கின்ற வகையிலும் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி சுமூகமான தீர்வு காண ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.