இந்திய விண்வெளி பயணத்திட்டமான ககன்யான் திட்டத்திற்கு உயிரூட்டும் விதமாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுபான்சு சுக்லா பத்திரமாக பூமி திரும்பியுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஆக்ஸியம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம், நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமையுடன் இணைந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் கடந்த ஜூன் 25ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு இந்திய விமானப்படை கேப்டனும் விண்கலத்தின் பைலட்டுமான சுபான்சு சுக்லா, முன்னாள் நாசா விஞ்ஞானி பெக்கி விட்சன், திட்ட நிபுணர்களான ஹங்கேரியின் திபோர் கபு மற்றும் போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் பயணம் மேற்கொண்டனர். சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த நான்கு பேரும் திட்டமிட்டபடி 18 நாட்கள் தங்கியிருந்து, 60 ஆய்வுகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட வெளிநடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்திய நேரப்படி நேற்று முன்தினம் மாலை அமெரிக்காவின் கலிபோர்னியா பசிபிக் கடலில் பத்திரமாக தரையிறங்கினர்.
தங்களது 18 நாள் பயணத்தின் ஐந்தாம் நாளில், சுபான்சு எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கான நிலையான உணவு மூலங்களை ஆராயும் நுண்ணுயிர் பாசி மாதிரிகள் ஆய்வை துவக்கினார். ஆறாம் நாளில் இந்தியாவின் ‘இன்ஸ்டிடியூட் பார் ஸ்டெம்செல் சயின்ஸ் அண்ட் ரிஜெனரேடிவ் மெடிசின் (InStem)’ முன்மொழியப்பட்ட எடையற்ற நிலையில் தசை செல்களின் நடத்தையை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் மூலம் எதிர்காலத்தில் நிலவு, செவ்வாய் போன்ற நீண்டகால பயணங்களில் விண்வெளி வீரர்களின் தசைகளைப் பாதுகாக்கும் முறைகளை உருவாக்குதலில் நமக்கு வழிகாட்டும். மேலும் பூமியில் தசை சீரழிவு நோய்களுக்கான சிகிச்சைகளில் முன்னேற்றம் காணவும் உதவும்.
ஏழாம் நாளில், இஸ்ரோவின் சயனோ பாக்டீரியா வளர்ச்சியை ஆவணப்படுத்தினார். எட்டாம் நாள் பெங்களூர் ஐஐஎஸ்சி வடிவமைத்த நுண்ணிய உயிரினங்கள் விண்வெளியில் எவ்வாறு உயிர்கள் வாழ்கின்றன என்பதை ஆராய்ந்தார். ஒன்பதாம் நாள் விடுமுறைக்கு பின் பத்தாம் நாளில், சுபான்சு தனது ஆய்வுகளின் மாதிரிகளை சேகரித்து பதப்படுத்தினார். 11ம் நாள் இந்திய விவசாய மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இஸ்ரோவுடன் இணைந்து பூமியிலிருந்து எடுத்துச் சென்ற பயிர்கள் முளைவிடுதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
12ம் நாளில், சுபான்சு செல்லுலார் மாதிரிகளையும் 13ம் நாளில் சயனோபாக்டீரியா மாதிரிகளையும், 14ம் நாளில் விண்வெளியில் முளைவிட்ட தாவரங்கள் உட்பட அனைத்து உயரி ஆய்வுகளின் மாதிரிகளை -80°C உறைபனியில் பதப்படுத்தினார். 15ம் நாளில் பூமியை சுமார் 230 முறை சுற்றி வந்த குழுவினர் 16ம் நாளில், நுண்ணுயிர் பாசி ஆராய்ச்சியைத் தொடர்ந்த நிலையில் பதினேழாம் நாளில் வாய்ஸ் இன் ஸ்பேஸ், அக்வயர்ட் ஈக்விவலன்ஸ் டெஸ்ட் எனும் ஆய்விலும் ஈடுபட்டனர். 18ம் நாள், விண்வெளியில் பல நாட்கள் வாழ்ந்த சூழலில் ரத்த சர்க்கரை அளவு எப்படி மாறுபடுகிறது என்பதை ஆய்வு செய்த பின் டிராகன் விண்கலத்துக்கு திரும்பிய குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விடுபட்டு தரையிறங்கினர்.
பூமிக்கு திரும்பிய சுபான்சு சுக்லா சில செயல்பாட்டு நடைமுறைகளை மேற்கொண்டபின் அடுத்தமாதம் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வீரர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று பத்திரமாக பூமிக்கு திரும்பிய முதல் இந்திய விண்வெளி வீரர் என்கிற சுபான்சுவின் சாதனை இந்திய விண்வெளி ஆய்விற்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.