Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதே அரசின் மாபெரும் கனவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

கோவை: உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதே அரசின் மாபெரும் கனவு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை கொடிசியாவில் உலக புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த மாநாடு கோவை கொடிசியா அரங்கில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. தமிழகத்தை உலகின் முன்னணி ஸ்டார்ட்-அப் மையங்களுள் ஒன்றாக நிலை நிறுத்தவும், புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கிலும் நாட்டிலேயே முதல்முறையாக உலக புத்தொழில் மாநாடு நடைபெறுகிறது. இத்தகைய மாநாட்டில் 42 நாடுகளை சேர்ந்த 350 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களும் பங்கேற்றுள்ளனர். பின்னர், மாநாட்டில் முதல்வர் ஆற்றிய உரையில்,

தொழில் வளர்ச்சியில் மாநிலம் வளர்கிறது

தொழில் மாநாடுகள் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு மட்டுமின்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கும் சான்றாக உள்ளது. அமைதியான சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலத்தை தேடித்தான் தொழில் நிறுவனங்கள் வரும். வளர்ச்சியின் அடையாளமாக தொழில் நிறுவனங்கள் உள்ளன.

தொழில் தொடங்க உகந்த மாநிலம் தமிழ்நாடு

ஆட்சி பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் எண்ணற்ற தொழில் திட்டங்களை தமிழ்நாடு ஈர்த்துள்ளது.

2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்

2030க்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புத்தொழில் சார்ந்த விழிப்புணர்வு பரவ வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் புத்தொழில் சார்ந்த விழிப்புணர்வு சென்றடையவேண்டும்.

முற்போக்கு திட்டங்களை தீட்டுகிறோம் - முதலமைச்சர்

உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதே தமிழ்நாடு அரசின் மாபெரும் கனவு. தமிழ்நாட்டில் முற்போக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளில் 6 மடங்கு புத்தொழில் நிறுவனங்கள் புதிதாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் புத்தொழில் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கொண்டு வந்துள்ளோம்.

புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை உயர்வு

2032ஆக இருந்த புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 12,000ஆக உயர்ந்துள்ளன. 12,000 நிறுவனங்களில் சரிபாதி நிறுவனங்களை பெண்கள் தலைமையேற்று நடத்துகின்றனர்.

ஆண்டுதோறும் 36% உயரும் புத்தொழில் நிறுவனங்கள்

புத்தொழில் நிறுவனங்கள் ஆண்டுதோறும் 36 சதவீதம் அதிகரிப்பு. தமிழ்நாட்டில் புத்தொழில் நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். புதிதாக தொடங்கப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஆதாரம் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாடு அரசு தொடங்கி வைத்த இணையதளம் மூலம் புத்தொழில் நிறுவனங்கள் ரூ.129 கோடி நிதி திரட்டியுள்ளன.அடுத்த 10 ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

ரூ.100 கோடியில் இணை உருவாக்க நிதியம்

ரூ.100 கோடி முதலீட்டில் இணை உருவாக்க நிதியம் உருவாக்கப்படும் என உரையாற்றினார்.