Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதிய கல்விக் கொள்கை ஏற்காத மாநிலங்களில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வழங்கும் பட்டங்கள் செல்லாது..? யுஜிசி அறிக்கை

டெல்லி: புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ஏற்கனவே கடுமையான நிதி நெறுக்கடியை ஏற்படுத்தி வருகிறது. மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்குவோம் என ஒன்றிய அரசு அறிவித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசுக்கு சுமார் ரூ.2,500 கோடி நிதி வழங்காததன் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் கொண்டுவரப்படவுள்ள மாற்றங்கள் குறித்த வரைவு அறிக்கையை யுஜிசி தயாரித்துள்ளது. 21 பக்கங்கள் கொண்ட அந்த வரைவு அறிக்கை ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கைக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் அனுமதி அளித்தவுடன் வரக்கூடிய கல்வியாண்டில் இது அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கையில், பல்கலைகழக மானியக்குழு வகுத்திருக்க கூடிய விதிமுறைகளை கண்டிப்பாக அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைகழகங்கள், கல்லூரிகள் ஏற்கவேண்டும். யுஜிசி விதிமுறைகள் என்பது புதிய கல்விகொள்கையை அமல்படுத்த வேண்டும் என வெளிப்படையாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் யுஜிசி விதிமுறைகளை ஏற்காத பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் யுஜிசி திட்டங்களில் இருந்து நீக்கப்படும். திட்டங்களுக்கான நிதி வழங்கப்படாது.

அதேபோல் பல்கலைக்கழக மானிய குழு அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வழங்கப்படும் பட்டங்கள் என்பது செல்லாததாகிவிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல்கலைகழகங்கள், கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வழங்கும் திட்டங்களுக்கும் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.