புதிய டிஜிபி நியமன விவகாரம்; தமிழ்நாடு அரசு பட்டியலை விரைந்து பரிசீலிக்க வேண்டும்: யுபிஎஸ்சி-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: தமிழ்நாட்டிற்கான புதிய டிஜிபி நியமனம் தொடர்பான பட்டியலை விரைந்து பரிசீலிக்குமாறு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் காவல் துறை சீர்திருத்தங்கள் தொடர்பான பிரகாஷ் சிங் வழக்கில், கடந்த 2006ம் ஆண்டு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதன்படி, மாநில அரசுகள் தங்களின் காவல்துறை தலைமை இயக்குநரை (டிஜிபி) நியமிக்கும்போது, தகுதியான மூன்று மூத்த அதிகாரிகளின் பட்டியலை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (யுபிஎஸ்சி) அனுப்பி வைக்க வேண்டும்.
அந்தப் பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வாணையம் தேர்வு செய்யும். மேலும், நியமிக்கப்படும் அதிகாரிக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், தற்காலிகமாக பொறுப்பு தலைமை இயக்குநர்களை நியமிக்கக் கூடாது என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதை அடுத்து, பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். இவரது நியமனம் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் செயல் எனக் கூறி, தமிழ்நாடு அரசுக்கு எதிராக வழக்கறிஞர் ஹென்றி திபேன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘தமிழ்நாட்டில் பொறுப்பு டிஜிபியை ஏன் நியமனம் செய்தீர்கள்?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு அரசு தரப்பில், புதிய டிஜிபியை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தேர்வாணையத்திற்கு குறிப்பிட்ட காலக்கெடு எதையும் விதிக்க முடியாது என்று தெரிவித்தனர். இருப்பினும், தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பி வைக்கப்படும் புதிய டிஜிபி தொடர்பான தகுதிப் பட்டியலை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் விரைந்து பரிசீலித்து இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.