Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லியை தொடர்ந்து சண்டிகரில் புதிய சர்ச்சை: கெஜ்ரிவாலுக்கு 7 நட்சத்திர சொகுசு மாளிகை..? பாஜக - ஆம் ஆத்மி இடையே கடும் மோதல்

புதுடெல்லி: பஞ்சாப் மாநில அரசுப் பணத்தில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சண்டிகரில் சொகுசு மாளிகை ஒதுக்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லத்தைப் புதுப்பிக்க, மக்கள் வரிப்பணம் ரூ.45 கோடிக்கு மேல் முறைகேடாகச் செலவிடப்பட்டதாக, ‘சிஷ் மஹால்’ சர்ச்சை எழுந்திருந்தது. இது, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது பெரும் புயலைக் கிளப்பியது. தற்போது அதேபோன்ற புதிய சர்ச்சையில் கெஜ்ரிவால் சிக்கியுள்ளார்.

பஞ்சாப்பில், பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கெஜ்ரிவாலின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக, சண்டிகரில் உள்ள செக்டார் 2 பகுதியில், இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ‘7 நட்சத்திர சொகுசு மாளிகை’ ஒன்றை ஒதுக்கியுள்ளதாக டெல்லி பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு, ‘சிஷ் மஹால் 2.0’ எனப் பெயரிட்டுள்ள பாஜக, அந்த மாளிகையின் ‘சாட்டிலைட்’ புகைப்படங்களையும் வெளியிட்டு, இது மக்கள் பணத்தை தவறாகப் பயன்படுத்தும் செயல் என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டை, ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்வாதி மாலிவாலும் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பஞ்சாப் அரசு முழுவதும் ஒரே ஒரு மனிதருக்காகச் செயல்படுகிறது’ என்று குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆம்ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை; போலியானவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை.

பாஜக வெளியிட்ட புகைப்படம், பஞ்சாப் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தின் புகைப்படம். முடியுமானால், கெஜ்ரிவாலுக்கு மாளிகை ஒதுக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ ஒதுக்கீடு கடிதத்தை பாஜக வெளியிடத் தயாரா?’ என்று சவால் விடுத்துள்ளது. இந்த விவகாரம், இரு கட்சிகளுக்கும் இடையே பெரும் வார்த்தைப் போரை ஏற்படுத்தியுள்ளது.