Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதிய தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா உறுதி; சென்னை ஐகோர்ட் மாண்பை காக்க சேவகனாக செயல்படுவேன்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பை காக்க சேவகனாக இருப்பேன் என்று புதிய தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா கூறினார்.சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த கே.ஆர்.ராம் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் வஸ்தவா சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து, உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நேற்று முன்தினம் நடந்தது. புதிய தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் நேற்று காலை வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தமிழ்நாடு கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ஜெ.ரவீந்திரன், ஆர்.நீலகண்டன், பி.குமரேசன், பி.முத்துக்குமார், ஆர்.சுரேஷ்குமார், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஆர்.கிருஷ்ண குமார், பொருளாளர் ஜி.ராஜேஷ் கலந்துகொண்டனர்.

தலைமை நீதிபதியை வரவேற்று தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் பாஸ்கர், பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவி என்.எஸ்.ரேவதி, லா அசோசியேசன் தலைவர் செல்வராஜ் பேசினர். நிகழ்ச்சியில் அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், துணை தலைவர் அறிவழகன், பொருளாளர் ஜி.ராஜேஷ், மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, ஏற்புரை வழங்கி தலைமை நீதிபதி பேசும்போது, ‘‘பெருமை வாய்ந்த பாரம்பரியமிக்க இந்த நீதிமன்றத்தில் பணியாற்றுவதில் பெருமையடைகிறேன். சென்னை உயர் நீதிமன்றம் சுதந்திரமாக செயல்படும் நீதிபதிகளையும், துணிச்சலான வழக்கறிஞர்களையும் தந்துள்ளது. இந்த நீதிமன்றம் ஜனநாயகத்திலும், நீதியின் ஆட்சியிலும் முக்கிய தூணாக விளங்கியுள்ளது. இந்த நீதிமன்றத்தின் நிர்வாகியாக மட்டுமல்லால் அரசியலமைப்பை செயல்படுத்தி இந்த நீதிமன்றத்தின் மாண்பை காப்பதற்கு ஒரு சேவகனாக இருப்பேன். வழக்கறிஞர்கள் ஒத்துழைப்புடன் இந்த நீதிமன்றத்தின் பெருமையை உயர்த்துவேன்’’ என்றார்.