Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியத்தில் புதிய ஆட்டோக்கள், நிர்வாக அனுமதி ஆணை

*ஊட்டியில் செய்தித்துறை அமைச்சர் வழங்கினார்

ஊட்டி : தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுபெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் 3 பேருக்கு தலா ரூ.1 லட்சம் மானியத்தில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள ஆட்டோக்கள் மற்றும் நிர்வாக அனுமதி ஆணைகளை செய்தித்துறை அமைச்சர் வழங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மற்றும் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஊட்டி தமிழகம் மாளிகையில் நேற்று முன்தினம் நடந்தது.

அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து, சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடனுதவிகள், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்தும், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவங்கப்படும் என அறிவித்திருத்தார்கள்.

அதன்படி அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் துவக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் நடைபெற்று வருகிறது. மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள இம்முகாமில், அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது கனிவுடன் பரிசீலனை செய்து 45 நாட்களுக்குள் தீர்வுகாணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே நமது மாவட்டத்தில் ஊட்டி மற்றும் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து, குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், கட்டப்பட்டு வரும் புதிய நகர்ப்புற துணை சுகாதார நிலையங்களை விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மழைகாலத்திற்கு முன்பாக முடிக்க வேண்டும். அரசால் வழங்கப்படும் நிதியினை சரியான முறையில் செலவு செய்திடும் வகையில் திட்டமிட்டு உரிய காலத்திற்குள் வளர்ச்சி திட்ட பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களின் அடிப்படை வசதிகளான சாலை உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், என்றார். முன்னதாக, தமிழ்நாடு அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்குவதை ஊக்குவிக்கவும், அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்பினை உருவாக்கவும், வருமானம் ஈட்டும் திறன் மற்றும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில் 3 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ.4 லட்சம் மதிப்பில் (தலா ரூ.1 லட்சம் மானியம்) புதிய ஆட்டோவிற்கான சாவிகள் மற்றும் நிர்வாக அனுமதி ஆணைகளை வழங்கினார். பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகள் குறித்த நான்காண்டு சாதனை மலரினை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்பி நிஷா, மாவட்ட வன அலுவலர் கவுதம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அபிலாஷா கவுர், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, மகளிர் திட்ட அலுவலர் ஜெயராமன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலாமேரி, நகராட்சி ஆணையர்கள் மோகன், இளம்பரிதி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய உறுப்பினர் பொன்தோஸ், சுற்றுலாத்துறை அலுவலர் துர்காதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.