ஜி பிரிவில் நெதர்லாந்து அமர்க்களம்; உலக கோப்பை கால்பந்தில் ஆட தகுதி: விறுவிறு போட்டியில் ஆறு கோலடித்த ஜெர்மனி
லெப்ஸிக்: கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகளி்ல நேற்று, ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் அபார வெற்றி பெற்று, ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் ஆட தகுதி பெற்றுள்ளன. வரும் 2026ம் ஆண்டு ஜூனில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடைபெற உள்ளன. போட்டிகளை நடத்தும் இந்த 3 நாடுகளும் உலகக் கோப்பை போட்டிகளில் ஆட நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் போட்டிகளில் பங்கேற்கும் மற்ற அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஜெர்மனியின் லெப்ஸிக் நகரில் நேற்று, ஏ பிரிவில் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஜெர்மனி-ஸ்லோவேகியா அணிகள் மோதின. போட்டியின் துவக்கம் முதல் அற்புதமாக ஆடிய ஜெர்மனி அணி வீரர்கள் கடைசி வரை தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி கோல் மழை பொழிந்தனர். போட்டியின் 18வது நிமிடத்தில் ஜெர்மனியின் நிக் வோல்டமேட், 29வது நிமிடத்தில் செர்கி கினாப்ரி, 36, 41வது நிமிடங்களில் லெரோய் சேன், 67வது நிமிடத்தில் ரிடல் பாகு, 79வது நிமிடத்தில் அசான் குவெட்ரோகோ அடுத்தடுத்து கோல்கள் போட்டு அசத்தினர்.
கடைசியில், 6-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அபார வெற்றி பெற்று, ஏ பிரிவு புள்ளிப் பட்டியலில் முன்னிலை பெற்று உலகக் கோப்பை போட்டிகளில் ஆட தகுதி பெற்றது. ஆம்ஸ்டர்டாமில், ஜி பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் நெதர்லாந்து - லித்துவேனியா நாடுகள் மோதின. போட்டி துவங்கி 16வது நிமிடத்தில் நெதர்லாந்தின் டிஜானி ரெய்ன்டர்ஸ் முதல் கோலடித்தார்.
தொடர்ந்து அந்த அணியின் கோடி கேக்போ 58வது நிமிடத்திலும், ஸேவி சைமன்ஸ் 60வது நிமிடத்திலும், டோன்யெல் மலென் 62வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல்கள் போட்டு அசத்தினர். மாறாக லித்துவேனியா அணியால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. அதனால், 4-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்ற நெதர்லாந்து, ஜி பிரிவிலிருந்து, உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு தகுதி பெற்றது.


